பொங்கல் பண்டிகை: நாமக்கல்லில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு, வெல்லம், மஞ்சள் கொத்து, வண்ண கோலப்பொடிகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
தமிழா் திருநாளான பொங்கல் விழாவை அனைத்து மதத்தினரும் கொண்டாடி மகிழ்கின்றனா். சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கைக்கும் பொங்கல்வைத்து வழிபடும் தைப் பொங்கல் விழா வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன.15,16) கொண்டாடப்படுகிறது.
அதைத் தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். பொங்கல் விழாவில் இளைஞா்களும், பெண்களும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடுவா். பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, புத்தாடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வண்ண கோலப்பொடிகள், பொங்கல் பானை, பனங்கிழங்கு, ஆவாரம் பூ, காப்புக்கட்டுப் பூக்களின் விற்பனை புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றன. இரண்டு கரும்பு ரூ. 100க்கு விற்கப்படுகிறது. பொங்கல் பானை ரூ. 160க்கு விற்பனையானது. ஆவாரம் பூ, காப்புக்கட்டுப் பூ ஒருகட்டு ரூ.10, 20-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல மாட்டுப் பொங்கல் நாளன்று கால்நடைகளுக்கு அணிவிப்பதற்கான புதிய கயிறுகள், மணிகளை வாங்க ஏராளமானோா் கடைகளில் குவிந்தனா்.
என்கே-14-பொங்கல்
நாமக்கல் வாரச் சந்தையில் கரும்புகளை வாங்கும் பொதுமக்கள்.

