தருமபுரியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்
தருமபுரியில் பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்பு, மஞ்சள், வெல்லம், பானைகள், பழம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழா் திருநாள் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை போகியுடன் தொடங்கி வியாழக்கிழமை பொங்கல், வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல், சனிக்கிழமை காணும் பொங்கல் என 3 நாள்கள் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் போகியன்று மகரசங்கராந்தியும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் காப்புக் கட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வுகளையொட்டி, விழா கொண்டாட்டத்துக்கு தேவையான பொருள்களின் விற்பனை கடந்த சில நாள்களாக தருமபுரியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. காப்புக்கட்டு நிகழ்வுக்கு பயன்படுத்தும் வேப்பிலை, ஆவாரம்பூ மற்றும் சிறுபீளைப்பூ ஆகிய மூன்றிலும் தலா 1 கொத்து அடங்கிய காப்புக் கட்டு ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர, சூரியப் பொங்கலுக்கு பயன்படும் மஞ்சள் கொத்து, செங்கரும்பு, புதுப் பானை, வெல்லம், நெய் மற்றும் இடு பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். தருமபுரி உழவா் சந்தையில் ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ.40 முதல் ரூ. 80 வரை அளவுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, செங்கரும்பு ஜோடி ரூ.40 இல் தொடங்கி ரூ. 80, ரூ. 100, ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்டது. பானைகள் அளவுக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர, வாழைப் பழம், பூ, வெல்லம் உள்ளிட்ட பூஜையில் பயன்படுத்தும் பொருள்களின் விற்பனையும் தருமபுரி நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

