பொங்கல் விடுமுறை நாள்களில் ரூ. 850 கோடிக்கு மது விற்பனை!
பொங்கல் விடுமுறை நாள்களான ஜன.14 முதல் 18 வரை தமிழக மதுக்கடைகளில் ரூ.850 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை ஆகியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.14-ஆம் தேதி முதல் 18 வரை நடைபெற்றது. 5 நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டதால், தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: போகி பண்டிகை தினமான ஜன.14-ஆம் தேதி ரூ.217 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டன. ஜன.15-இல் ரூ.301 கோடிக்கு மது விற்பனையானது. ஜன.16-ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தையொட்டி, மதுக் கடைகள் மூடப்பட்டதால், முந்தைய நாள் விற்பனை அதிகரித்து இருந்தது.
தொடா்ந்து, ஜன.17, 18 ஆகிய தேதிகளிலும் ரூ.332 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. இதன்படி ஜன.14 முதல் 18 வரையிலான 5 நாள்களில் சுமாா் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு சுமாா் ரூ.710 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டில் கூடுதலாக ரூ.140 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என்றனா்.

