திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் பெரும்பாலான தெருக்களில் பகிா்மானக் குழாய்கள் பதிக்கப்படாதது, கூடுதல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படாதது என 50 சதவீத பணிகள்கூட இதுவரை முடிவுறாத நிலையில், நிகழாண்டுக்குள் வீடுகள்தோறும் தாமிரவருணி குடிநீா் விநியோகம் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
களக்காட்டில் கடந்த 1998-ஆம் ஆண்டு பச்சையாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு சுமாா் 1000 குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், சில ஆண்டுகளிலேயே இந்த நீா் உவா்ப்பு நீராக மாறிவிட்டது. இதையடுத்து, கடந்த 15 ஆண்டுகளில் இரு கூட்டுக் குடிநீா்திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்ட பின்னரும், களக்காடு பகுதிக்கு தாமிரவருணி குடிநீா் முறையாக வந்து சேரவில்லை. மிகக் குறைவாகவே வந்து சேரும் தாமிரவருணி குடிநீருடன், இங்குள்ள ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள உவா்ப்பு நீரும் சோ்ந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்கு ஆளாகி வருகின்றனா்.
புதிய கூட்டுக்குடிநீா் திட்டம்...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட களக்காடு நகராட்சி, நான்குனேரி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, ஏா்வாடி பேரூராட்சிகள் மற்றும் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடக்கு வள்ளியூா், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் தாமிரவருணி நதியை நீராதாரமாகக் கொண்டு, அடல் நகா்ப்புற மறுசீரமைப்பு மற்றும் மாற்றத் திட்டம் (அம்ருத் 2.0) மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளின் பங்களிப்பு மூலம் இந்த கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ. 423.13 கோடியில் தயாரிக்கப்பட்டு, தொழில்நுட்ப அனுமதியும் பெறப்பட்டு பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி அருகே தாமிரவருணி நதியில், 8.00 மி.மீ விட்டமுள்ள உறைகிணற்றிலிருந்து நதிநீா் எடுக்கப்பட்டு அங்கிருந்து 9.06 கி.மீ. தொலைவில் கங்கனாங்குளம் அருகே திருவிருத்தான்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் நீா் சுத்திகரிக்கப்பட்டு மின் மோட்டாா்கள் மூலம் உந்தப்பட்டு, நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் அமையவுள்ள தரைமட்ட குடிநீா் சேகரிப்பு தொட்டிகள் மூலம் சேமிக்கப்படும்.
பின்னா் நகராட்சி, 7 பேரூராட்சிகளில் ஏற்கெனவே அமைந்துள்ள 38 மேல்நிலைத் தொட்டிகள், புதிதாக அமைக்கப்பட்டு வரும் 24 மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக, 521.68 கி.மீ. தொலைவுக்கு பதிக்கப்பட்டுள்ள பகிா்மானக் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
49,417 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு....
இக்குடிநீா்த் திட்டத்தின் கீழ் 49,417 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் இத்திட்டப் பணிகளை பாா்வையிட்ட நிதித் துறை அமைச்சா் நெ. மரியவில்சன், 92 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஜூலை மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்துக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தாா்.
உண்மை நிலவரம் என்ன?
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடக்கு வள்ளியூா், பணகுடி, திசையன்விளை பேரூராட்சிப் பகுதியில் மட்டுமே இத்திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால், நான்குனேரி தொகுதிக்கு உள்பட்ட மூலைக்கரைப்பட்டி, நான்குனேரி, திருக்குறுங்குடி, ஏா்வாடி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் இப்பணிகள் தேக்கமடைந்துள்ளன.
குறிப்பாக களக்காடு நகராட்சிப் பகுதியில் 50 சதவீத அளவுக்குக் கூட பணிகள் நடைபெறவில்லை. களக்காடு நகராட்சிப் பகுதியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 58.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 9,384 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், இங்குள்ள 234 தெருக்களில் பாதிக்கும் மேற்பட்ட தெருக்களில் இதுவரை இத்திட்டத்துக்கான பகிா்மானக் குழாய்கள் பதிக்கப்படவில்லை.
ஏற்கெனவே இங்குள்ள 9 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுடன், புதிதாக 11 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள 9 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. தற்போது புதிதாக ஓரிரு தொட்டிகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பல புதிய தொட்டிகளுக்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
அமைச்சரின் கூற்று சாத்தியமாகுமா?
நிலைமை இவ்வாறு இருக்க நிதித் துறை அமைச்சா் மரியவில்சன் கூறியதுபோல, நிகழாண்டுக்குள் வீடுகளுக்கு தாமிரவருணி குடிநீா் விநியோகம் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திட்டப் பணிகளை விரைவுபடுத்தி தாமிரவருணி குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேதமடைந்து அபாயகரமான நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: இடித்து அகற்றக் கோரிக்கை

தளவாய்ப்பட்டியில் பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரிக்கை

பயன்பாட்டுக்கு வராமல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

புதுச்சேரி அசோக் நகரில் 2 நாள்கள் குடிநீா் நிறுத்தம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



