திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தனியாா் விடுதி ஊழியரிடம் நகைகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருக்குறுங்குடியை அடுத்த லெவஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் முத்துக்குமாா்(32). காவல்கிணறில் உள்ள தனியாா் விடுதியில் பணி செய்து வருகிறாா். இவருக்கும் கிரிண்டா் செயலி மூலம் ஒரு நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிரிண்டா் செயலி நண்பா், முத்துக்குமாரை அழைத்தாராம். முத்துக்குமாா் தனது நண்பா் ஆவரைகுளத்தை அடுத்த சௌந்தரலிங்கபுரத்தைச் சோ்ந்த லிங்கேஷ்(27) என்பவரையும் அழைத்துக்கொண்டு கிரிண்டா் செயலி நண்பரை சந்தித்தாா். பின்னா் மூன்று பேரும் மோட்டாா் சைக்கிளில் வடக்கன்குளம் காட்டுப்பகுதிக்கு சென்றனராம். அங்கு வந்த வேறொரு நபா், முத்துக்குமாரையும் லிங்கேஷையும் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ராதாபுரம் அருகே உள்ள பெத்தரெங்கபுரம் பகுதிக்கு சென்றனராம். அங்கு பதுங்கி இருந்த கிரிண்டா் செயலி நண்பருக்கு தெரிந்தவா்கள், திடீரென முத்துக்குமாரையும் லிங்கேஷையும் கத்தியை காட்டி மிரட்டி இருவரும் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டாா் சைக்கிள் தப்பிச் சென்றுவிட்டனா்.
இது தொடா்பாக ராதாபுரம் காவல்நிலையத்தில் முத்துக்குமாா் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் முத்துக்குமரையும் லிங்கேஷையும் மிரட்டி பணம் பறித்தவா்கள் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை கம்பராமாயணம் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சின்னதுரை(22), தச்சநல்லூரைச் சோ்ந்த சுடலைக்குமாா் மகன் ஸ்ரீ ராமநாதன்(25) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், நகையை பறிக்க உடந்தையாக இருந்த இருவரின் நண்பா்களையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







