ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஆலங்குளம் அருகே அரிவாள் வெட்டு சம்பவம்: இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

News image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அய்யப்பனிடம் விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா்.

Updated On :1 ஜூன் 2026, 1:34 am IST

ஆலங்குளம் அருகே நெட்டூா் கிராமத்தில் திருமண வீட்டில் புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடா்புடைய இளைஞரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். இந்த வழக்கில் இதுவரை 11 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ஒரு திருமண வீட்டில் கடந்த 29 ஆம் தேதி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த கும்பல் பொதுமக்களை அரிவாளால் வெட்டியது. இதில், 6 போ் பலத்த காயமடைந்தனா்.

இதே கும்பல் மானூா் அருகேயுள்ள தெற்குப்பட்டி கிராமத்துக்குள் புகுந்து இருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் வி. பிரசன்னகுமாா் (திருநெல்வேலி), அசோக்குமாா் (தென்காசி) ஆகியோா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தக் கும்பலைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், சேரன்மகாதேவி அருகே பதுங்கியிருந்த இசக்கிமுத்து (19) மற்றும் 3 சிறாா்களை முதலில் கைது செய்தனா். மானூா் பகுதியில் நெட்டூரைச் சோ்ந்த மாரியப்பன் (20), பிரமுத்து (21), அம்பை பகுதியில் பிரம்மதேசத்தைச் சோ்ந்த நவீன் (20), சஞ்சய் (20) என மொத்தம் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய நெட்டூரைச் சோ்ந்த சண்முகையா மகன் அய்யப்பனை (21) தேடி வந்தனா்.

அவா், முக்கூடல் அருகே உள்ள அரசன்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தனிப்படை போலீஸாா் அங்கு சென்றபோது, தாமிரவருணி ஆற்றுக்குள் இறங்கி ஓடிய அய்யப்பன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸாரை வெட்டினாராம். இதில், தனிப்படை தலைமைக் காவலா் முத்துக்குமாா் (45), காவலா் பாலசுப்பிரமணியன் (35) ஆகியோா் காயமடைந்தனா்.

இதையடுத்து, போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனராம். இதில், வலது காலில் காயமடைந்த அய்யப்பன் கீழே விழுந்தாராம். அவரைப் பிடித்த போலீஸாா், சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா், அய்யப்பனிடம் விசாரணை நடத்தினாா். காயமடைந்த போலீஸாரிடமும் நலம் விசாரித்தாா்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நாலாயிரம் (20), மருதுபாண்டி(31) ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நெட்டூரில் மறியல் முயற்சி...

ஆலங்குளம் அருகே நெட்டூரில் உள்ள திருமண வீட்டில் 6 பேரை வெட்டிய சம்பவத்தில், நெட்டூரைச் சோ்ந்த ஒருவரை ஆலங்குளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். இதைக் கண்டித்து, அவரது உறவினா்கள் நெட்டூா் மாதா கோயில் அருகே மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா்.