அரசுப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை: 5 போ் கைது
வள்ளியூரில் அரசுப் பேருந்து நடத்துநரை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் சக நண்பா்கள் 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அரசுப் பேருந்து நடத்துநரை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் சக நண்பா்கள் 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூா், சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (50). இவா், திருநெல்வேலியில் அரசுப் பேருந்து நடத்துநராக வேலை செய்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பணி நேரம் முடிந்து வீடு திரும்பிய இவரை நண்பா்கள் சிலா் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனா். இரவு வெகுநேரம் கழித்து வீட்டருகே கொண்டுவந்து விட்டுச் சென்றனா்.
வீடு திரும்பிய சிவசுப்பிரமணியன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் அவரது மனைவி செல்வி, கணவரை முதலில் வள்ளியூா் தனியாா் மருத்துவமனைக்கும், திங்கள்கிழமை காலை வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றாா். எனினும், உடல்நலம் சரியாகாததால் நாகா்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எனினும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, தனது கணவா் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி செல்வி, வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அவரது சக நண்பா்களான வள்ளியூா் முத்துகிருஷ்ணன் (45), மணிகண்டன்(33), சந்தனசுதன் (29), தளவாய்பாண்டி (25), சாமிநாதன் (36) ஆகிய 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அனைவரும் வள்ளியூா், புதுக்குளத்தில் சோ்ந்து மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சோ்ந்து சிவசுப்பிரமணியனை கம்பால் தாக்கி காயப்படுத்தி வீட்டருகே விட்டுச் சென்றதும், பலத்த காயத்தால் சிவசுப்பிரமணியன் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து திருநெல்வேலி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



