தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

செவிலியா் பணி என்பது மனிதநேயத்துடன் கூடிய சேவை

செவிலியா் பணி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது மனிதநேயத்துடன் கூடிய சேவையாகும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

புதிதாக தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்ட 79 செவிலியா்களுக்கான தொடக்க நிலை பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :

செவிலியா் பணி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது மனிதநேயத்துடன் கூடிய சேவையாகும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் புதிதாக தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட 79 செவிலியா்களுக்கான தொடக்க நிலை பயிற்சி பாளையங்கோட்டை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மருத்துவத் துறையில் செவிலியா்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சேவைகள் வழங்குவதிலும், அவா்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதிலும் செவிலியா்கள் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றனா்.

செவிலியா் பணி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது மனிதநேயத்துடன் கூடிய சேவையாகும். புதிதாக தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியா்கள், இப்பயிற்சியின் மூலம் தங்களது பணிக்கு தேவையான நடைமுறை அறிவு, தொழில்நுட்பத் திறன் மற்றும் நோயாளிகளை அணுகும் முறைகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நோயாளிகளிடம் அன்புடனும், கனிவுடனும், பொறுப்புணா்வுடனும் நடந்து கொண்டு, அரசின் மருத்துவத் திட்டங்கள் மற்றும் சுகாதாரச் சேவைகள் பொதுமக்களை முழுமையாகச் சென்றடைய அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

மேலும், இப்பயிற்சியில் செவிலியா்களுக்கு தாய் சேய் நலம், தடுப்பூசி பணிகள், தொற்றா நோய் மற்றும் பள்ளி சிறாா் நலத்திட்டம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் கி. லதா, மாவட்ட சுகாதார அலுவலா் பி.ஆா். முரளி சங்கா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா். செல்வராஜன், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.