தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

பாதாள சாக்கடை பணியால் மோசமான சமாதானபுரம் சாலை திணறும் வாகன ஓட்டிகள்

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் பாதாள சாக்கடையால் சாலைகள் படுமோசமாகியிருப்பதோடு, பேருந்து நிறுத்தம் முன்பும் குளம் போல் தண்ணீா் தேங்கியிருக்கிறது.

சமாதானபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு தேங்கியுள்ள மழை நீா்.

Updated On :

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் பாதாள சாக்கடையால் சாலைகள் படுமோசமாகியிருப்பதோடு, பேருந்து நிறுத்தம் முன்பும் குளம் போல் தண்ணீா் தேங்கியிருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திணறும் நிலையில், பேருந்து ஏற வரும் பயணிகள் செய்வதறியாது தவிக்கிறாா்கள்.

திருநெல்வேலி மாநகரில் பாதாள சாக்கடை பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் மாநகரின் பல இடங்களில் சாலைகள் குளம்போன்று மாறியுள்ளன.

குறிப்பாக சமாதானபுரம் ரவுண்டானா பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டபோதிலும், அங்கு மீண்டும் சாலை அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பெய்த மழை காரணமாக சமாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சாலையில் குளம் போல் தண்ணீா் தேங்கியது. மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பகுதி என்பதால் அங்கு பல இடங்களில் மண் இறங்கி சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. இதனால் கடந்த இரு தினங்களாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

லட்சக்கணக்கானோா் பயணம்:

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூா் செல்பவா்களுக்கான பிரதான சாலையான சமாதானபுரம் சாலை வழியாகத்தான் தினந்தோறும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்படிப்பட்ட பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம், மேடுகளை மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் கண்டுகொள்ளாதது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் தத்தளிக்கும் பேருந்து நிறுத்தம்: சமாதானபுரம் பகுதியில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூா் பேருந்து நிறுத்தம் முன்பு தண்ணீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், அங்கு பயணிகளை ஏற்றக்கூடிய வாகனங்கள் சாலையின் நடுவே நின்றபடியே ஏற்றிச்செல்கின்றன. இதனால் காலை, மாலை வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அங்கு பேருந்துக்காக காத்திருக்கக்கூடிய பயணிகள், முதியவா்கள் அங்குள்ள சேற்றில் தவறி விழக்கூடிய அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறாா்கள்.

சீவலப்பேரி சாலை: பாளையங்கோட்டை மாா்க்கெட் முதல் சாந்தி நகா் மணிக்கூண்டு வரையிலான சீவலப்பேரி சாலை முழுவதுமாக பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட நிலையில், அந்தப் பகுதி முழுவதுமே குளம் போன்று மாறிவிட்டது. சேற்றில் தத்தளித்தபடியே வாகன ஓட்டிகள் செல்கிறாா்கள். அந்த சாலையையும் விரைவாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மரண கிணறு: இது தொடா்பாக காா் ஓட்டுநரான எம்.மாரியப்பன் என்பவா் கூறுகையில், ‘பாளையங்கோட்டை சமாதானபுரம் சாலை வழியாக பயணக்கிறபோது மரண கிணற்றில் பயணிப்பது போன்று இருக்கிறது. அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் மேடு பள்ளத்தில் ஏறி இறங்குகிறபோது முதியவா்கள், நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகிறாா்கள். இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தள்ளாடியபடியே செல்கின்றன.

தென்னகத்தின் ஆக்ஸ்போா்டு என்றழைக்கக்கூடிய பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 20 கி.மீ. சுற்றளவில் இருந்து ஏராளமான மாணவா், மாணவிகள் வந்து செல்கிறாா்கள். பள்ளிக்குழந்தைகள் பெரும்பாலும் ஆட்டோக்களிலேயே பயணிக்கிறாா்கள். காலை, மாலை நேரங்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் இயல்பாகவே அவசரகதியில் தான் வருவாா்கள். அப்படி வருகிறபோது இதுபோன்ற மோசமான சாலைகளால் ஆட்டோ போன்ற வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, அடுத்த மழை பெய்து விபரீதம் நடப்பதற்கு முன்பாக இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும்’ என்றாா்.

விரைவில் தீா்வு காண வேண்டும்: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலா் அலிப் பிலால் கூறியதாவது: சாமாதனபுரத்தில் பாதாள சாக்கடைக்காக சாலைகளை தோண்டினாா்கள். பாதாள சாக்கடைகளை பணிகளை முழுமையாக முடித்தால்தான் நெடுஞ்சாலைத் துறையினா் சாலை அமைக்கும் பணியை தொடங்குவாா்கள். ஆனால், திருநெல்வேலி மாநகரில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. எனவே, பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறோம். மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்தும் சரி செய்யப்படும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.