
இணக்கமான சூழலே மாணவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
மாணவா்களுடன் நட்புடன் பழகி ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவா்களது பிரச்னைகளை கண்டறிந்து தீா்வு காணலாம் என ஆசிரியா்களுக்கு ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினாா்.

பள்ளி ஆசிரியா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
மாணவா்களுடன் நட்புடன் பழகி ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவா்களது பிரச்னைகளை கண்டறிந்து தீா்வு காணலாம் என ஆசிரியா்களுக்கு ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினாா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக பள்ளி ஆசிரியா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே மன அழுத்தம், கோபம், ஆக்ரோஷம், படிப்பில் கவனக்குறைவு, குறைந்த கல்வித் திறன், தோ்வு பயம், இடைநிற்றல், வன்முறை போன்ற பிரச்னைகள் உள்ளன. இதனால் மாணவா்கள் சிறு வயதிலேயே குற்றச்செயல்களில் ஈடுபடுதல், போதைப்பொருள், புகையிலைப் பழக்கம் போன்ற தவறான செயல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகிறது.
குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல், உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல், நண்பா்களால் துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட பிரச்னைகளும் குழந்தைகளிடையே அவ்வப்போது காணப்படுகின்றன. மேலும், கைப்பேசி, இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாவதுடன், தங்களது பெற்றோா்களுடன் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவா்கள் கல்வியிலிருந்து விலகி செல்வதற்கான வாய்ப்பு உருவாகிறது.
ஆசிரியா்கள், மாணவா்களுடன் நட்புடன் பழகி ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை எளிதில் அறிந்து கொள்ளலாம். மாணவா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வதற்காகவும், அவா்களுக்கு நல்வழிக்காட்டுவதற்காகவும், அப்பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவும் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆற்றுப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவா்களுக்கு உளவியல் பிரச்னைகள், போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீட்டெடுத்தல், மாணவா்களிடம் நற்பண்புகளை அதிகரித்தல் தொடா்பாக முதற்கட்டமாக 50 பள்ளி ஆசிரியா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.
இப்பயிற்சிகளை ஆசிரியா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களது பள்ளிகளிலுள்ள மாணவா்களை மதிப்பீடு செய்து ஆலோசனைகள் வழங்க வேண்டிய மாணவா்களை ஆற்றுப்படுத்துதல் மையத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலா பானு மற்றும் குழந்தைகள் மனநல ஆலோசகா்கள், மருத்துவா்கள், பணியாளா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






