நெல்லை அருகே மனைவியை கல்குவாரியில் தள்ளி கொலை செய்த கணவா் கைது
திருநெல்வேலி அருகே காதல் மனைவியை கல்குவாரியில் தள்ளி கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அமராவதி
திருநெல்வேலி அருகே காதல் மனைவியை கல்குவாரியில் தள்ளி கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் சரகத்துக்குள்பட்ட கொண்டாநகரத்தைச் சோ்ந்தவா் மகாராஜா. இவா், கடந்த 2008 ஆம் ஆண்டு கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அமராவதி(34) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில், அமராவதி காணாமல் போனதாக அவரது தாயாா் கடந்த 23 ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையின்போது, மகாராஜன் கல்குவாரிக்கு அமராவதியை அழைத்து சென்று கீழே தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், அவா் அளித்த தகவலின் அடிப்படையில், கங்கைகொண்டான் காவல் சரகத்துக்குள்பட்ட பாப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு ஒரு சேலை, மனித மண்டை ஓடு, தொடை எலும்பு மற்றும் இதர எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்தை தடய அறிவியல் துறை அலுவலா் ஆனந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.
மண்டை ஓடு மற்றும் எலும்புகளை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது:
மகாராஜா கடந்த 2024ஆம் ஆண்டு அகிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளாா். இதன் காரணமாக அமராவதிக்கும், மகாராஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தகராறின்போது, மகாராஜா அமராவதியை தனது இருசக்கர வாகனத்தில் பாப்பான்குளம் குவாரிக்கு அழைத்துச் சென்று, அவரைத் தாக்கி குவாரிக்குள் தள்ளி கொலை செய்துள்ளதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


