தூத்துக்குடியில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்: 45 நாள்கள் நடைபெறுகிறது

தூத்துக்குடியில் 45 நாள்கள் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை திறந்துவைத்தார்.

Updated On :

தூத்துக்குடியில் 45 நாள்கள் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை திறந்துவைத்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சி திறப்பு விழா சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு பொருள்காட்சியை திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியின்போது வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, வேளாண்மைத் துறை, மகளிர் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் துறை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 148 பயனாளிகளுக்கு 11 லட்சத்து 38 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி உள்ளிட்ட 27 அரசுத் துறைகளில் அரங்குகள் அமைக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள், குறித்த விவரங்கள் பொருள்காட்சியில் இடம் பெற்றன.

மேலும், அம்மா சிமென்ட், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட 6 அரசுத் துறை பொது நிறுவனங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்,மாணவிகள் பயன்பெறும் வகையில் வருவாய்த் துறை அரங்கில் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதவிர தனியார் கடைகள், உணவுக் கூடங்கள், ராட்டினங்கள், தாஜ்மகால் மாதிரி அமைப்பு மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அரங்குகளை அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்,  மாநகராட்சி மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ், மாநிலங்களவை உறுப்பினர் எல்.சசிகலாபுஷ்பா, மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.த. செல்லப்பாண்டியன், கடம்பூர் செ. ராஜூ, ஜீ.வி. மார்க்கண்டேயன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர்கள் எஸ்.பி. எழிலழகன் (செய்தி), கு. தாணப்பா (மக்கள் தொடர்பு), தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ் செல்வராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.