கயத்தாறையடுத்த ஓணமாகுளம் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோயில் அருகேயுள்ள நிலத்தை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட நிலம் எனக் கூறி கையகப்படுத்தியதைக் கைவிடக் கோரி திங்கள்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை பஜனை பாடல்கள் பாடி, தப்பட்டம் அடித்து நூதன முறையில் முற்றுகையிட்டனர்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஓணமாகுளம் கிராமத்தில் இந்து கம்மவார் சமுதாய மக்களுக்குப் பாத்தியப்பட்ட பழமையான ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளதாம். இந்தக் கோயிலின் வடபுறம் நந்தவனமும், மேற்கு பகுதியில் ஒரு கிணறும் இருந்து வந்ததாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இரண்டும் மாயமானதாம். இந்நிலையில், வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாம். அப்போது, கோயில் அருகேயுள்ள நிலத்தை விழாவுக்காக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனராம். இந்நிலையில் தற்போது ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கோயில் அருகேயுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானது எனக் கூறி, விழாக்கள் நடத்துவதற்கு தடை செய்து வருகின்றனராம். எனவே, ஏற்கெனவே புழக்கத்தில் இருந்து வந்த கோயிலுக்குப் பாத்தியப்பட்ட இடத்தை கோயிலிடமே ஒப்படைக்க வேண்டும் , விழா நடத்த எவ்வித தடையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில், மாவட்டச் செயலர் பரமேசுவரன், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் மாரியப்பன், இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவர் முருகன், பசு பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த செந்தில்குமரன், ஆளவந்தார் அறக்கட்டளை தலைவர் தங்கத்திருப்பதி உள்பட அப்பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டு, பஜனை பாடல்கள் பாடி, தப்பட்டம் அடித்து, கோலாட்டம் ஆடி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் தங்கையாவிடம் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








