முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!

அம்புபாச்சி மேளாவின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில்..

News image

காமாக்யா கோயில் - file photo

Updated On :24 ஜூன் 2026, 4:44 pm IST

அம்புபாச்சி மேளா என்பது இந்தியாவின் மிக முக்கியமான சக்தி வழிபாட்டு விழாக்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டியில் உள்ள காமாக்யா தேவி திருக்கோயிலில் நடைபெறுகிறது. இந்த விழா, பெண் சக்தி, இயற்கையின் சுழற்சியைப் போற்றும் தனித்துவமான திருவிழாவாகக் கருதப்படுகிறது.

காமாக்யா ஆலயத்தின் சிறப்பு

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியின் நிலாச்சல் மலையின் மேல் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க காமாக்யா திருக்கோயில். 51 சக்தி பீடங்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லை. இயற்கையாக அமைந்த யோனி வடிவ பாறை மற்றும் அதன் மேல் ஊறும் நீரூற்றை வழிபட்டு வருகிறார்கள். சக்தி பீடங்களில் இது காமகிரி பீடமாகத் திகழ்கிறது.

அம்புபாச்சி மேளா என்பது ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் (ஜூன்-ஜூலை) நடைபெறும் ஒரு நிகழ்வாகும். படைப்பாற்றல் மற்றும் கருவுறுதல் தெய்வமாகவும், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவராகவும் போற்றப்படும் காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாய் காலத்தைக் குறிக்கும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

அம்மனின் மாதவிடாய் காலங்களில பிரம்ம புத்திரா நதியின் நீர் சிவப்பாக மாறுவதாக ஐதீகம். மாதவிடாய் குறித்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கக்கூடிய பல பாரம்பரிய மத நடைமுறைகளைப் போலல்லாமல், அம்புபாச்சி மேளா வாழ்வில் இன்றியமையாத மற்றும் புனிதமான அம்சமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சடங்குகள், கொண்டாட்டங்கள்

"அம்பு" என்பது நீர் அல்லது உயிர் சக்தி என்றும், "பாச்சி" என்பது வெளிப்படுதல் என்றும் பொருள். இந்த விழாவின் மைய நம்பிக்கை என்னவென்றால், ஆண்டுக்கு ஒருமுறை (ருது) நிலையை அடையும் காமாக்யா தேவியின் திருவிழாவை அம்புபாச்சி மேளா காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சடங்காகும். ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் கடக்கிற மூன்று நாள்களும் கோயிலின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலம் நிறைவடைந்த பிறகு கோயிலின் நடை திறக்கப்படும்.

அம்புபாச்சி மேளா அன்னையை வழிபடும் தாந்த்ரீக மரபுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த சடங்கு வழிபாட்டில் கலந்துகொள்ள ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூரிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

அதன்படி, 2026-ல் கமாக்யா தேவி கோயில் ஜூன் 22 இரவு 9.08 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. அதோடு ஜூன் 26 அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டுச் சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்த பின்னர், சம்பிரதாய பூஜைக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Story image

கிழக்கின் மகாகும்பம்

அம்புபாச்சி மேளாவிற்கு அகோரிகள், நாக சாதுக்கள், தாந்திரீகர்கள், சன்னியாசிகள் எனப் பலரும் வருகை தருவார்கள். அம்மனின் மாதவிடாய் காலத்தில் மூன்று நாள்கள் நடைபெறும் மகா யாகத்தில் கலந்துகொள்கின்றனர். இந்த விழா "கிழக்கின் மகாகும்பம்" என்றும் அழைக்கப்படுகிறது. காமாக்யா தேவியின் படைப்பாற்றலுக்கு ஆழ்ந்த மரியாதைச் செலுத்தும் விதமாக, கோயில் கருவறையில் உள்ள தெய்வீக யோனியை (பெண் பிறப்புறுப்பு) பிரபஞ்சத்தின் கருப்பையாகக் கருதி வணங்குகிறார்கள்.

யாகம் நடைபெறும் மூன்று நாள்களிலும் தியானம், மந்திரங்கள் உச்சாடனம், தாந்த்ரீக சடங்குகள் செய்வதற்காக லட்சக்கணக்காகப் பக்தர்கள் இங்குக் கூடுகின்றனர். அந்த நாள்களில் கோயில் வளாகம் முழுவதும் ஆன்மிக உணர்வால் நிறைந்திருக்கும். நான்காவது நாளில், காமாக்யாவின் வருடாந்திர மாதவிடாய் காலம் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கோயில் திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள், தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்ற பின்னர், பக்தர்களின் தரிசனத்துக்காகக் கோயிலின் நடை திறக்கப்படும். இந்நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சியுடனும் விரிவான சடங்குகளுடனும் கொண்டாடப்படுகிறது.

காணிக்கை, பிரசாதம்

பக்தர்கள் காமாக்யாவிற்கு சிவப்பு நிறத் துணி, குங்குமம், மலர்கள், பழங்கள் போன்ற பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். பிரசாதமாகப் புனித நீர், சிவப்பு துணி வழங்கப்படுகிறது.

கலை நிகழ்ச்சிகள்

அம்புபாச்சி திருவிழாவின் போது, ​​கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளால் உயிர்ப்புடன் திகழ்கிறது. புகழ்பெற்ற ஆன்மிகவாதிகள், தாந்த்ரீகப் பயிற்சியாளர்கள் தங்கள் ஞானத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, திருவிழாவின் முக்கியத்துவம், தாந்த்ரீக மரபுகள் குறித்த ஆழமான புரிதலையும் வழங்குகிறார்கள்.

ஆன்மிகத் தேடல்

அம்புபாச்சி மேளாவில் கலந்துகொள்வதை ஒரு வாய்ப்பாகவே மக்கள் கருதுகின்றனர். துடிப்பான சூழலும், பக்தர்களின் தீவிர பக்தியும் இணைந்து, தெய்வீக அன்னையின் அருளையும், அவர் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும் உணர வைக்கின்றன. இத்திருவிழா வெறும் மதக் கூட்டம் மட்டுமல்ல, இது அனைத்து உயிர்களிலும் நிறைந்திருக்கும் தெய்வீக அன்னையின் அருளைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.

இத்திருவிழா பண்டைய தாந்த்ரீக மரபுகள், அன்னை மீதான ஆழ்ந்த பக்தி குறித்த தனித்துவமான புரிதலை வழங்குகிறது. ஆன்மிகத் தேடலில் இருப்பவர்களோ, ஆர்வமுள்ளவர்களோ யாராக இருந்தாலும், அம்புபாச்சி மேளா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவத்தை வழங்குகிறது. திருவிழா முடிந்த பிறகும் அந்த அனுபவத்தின் தாக்கம் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

தங்குமிடம்

குவாஹாட்டியில் பட்ஜெட் ஹோட்டல்கள் முதல் ஆடம்பர தங்குமிடங்கள் வரை பல்வேறு வசதிகள் உள்ளன. திருவிழாக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவதால், முன்கூட்டியே முன்பதிவு செய்வது நல்லது.

எப்படிச் செல்லலாம்?

விமானம் - லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் கோயிலுக்கு அருகில் உள்ளது.

ரயில் - குவாஹாட்டி ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து டாக்ஸிகள், ஆட்டோ-ரிக்ஷாக்கள் போன்ற உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மூலம் கோயிலை அடையலாம்.

2024, 2025ல் கோயிலுக்கு வந்த பக்தர்களின் விவரம்

அம்புபாச்சி மேளாவிற்கு காமாக்யா தேவி கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

2024-ல், வெளிநாட்டிலிருந்து 20 பேர் உள்பட மொத்தம் 7,46,066 பக்தர்கள் மேளாவிற்கு வருகை தந்த நிலையில், கடந்தாண்டு 42 வெளிநாட்டினர் உள்பட 7,72,019 பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.