மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மே 15 ஆம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோயில் நடை மதியம் 12.45 மணிக்கு சாத்தப்படும். ஆனால், அமைச்சருக்காக கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் நிர்மல்குமாரின் தரிசனத்துக்கு பிறகே கோயில் நடை அடைக்கப்பட்டது. அதேபோல, கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த விடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிபதி வி. லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி. பாலசுப்ரமணியம், கோயில் நடை அடைக்கும் முன்பே அமைச்சர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார்; அதற்கு கண்காணிப்பு கேமரா ஆதாரம் உள்ளது; அவரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை; கோவில் நடை பகல் ஒரு மணிக்கு தான் அடைக்கப்படும்; பகல் 12.50 மணிக்கு கோவிலுக்குள் நுழைந்துவிட்டதாக விளக்கம் அளித்தார்.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், எம்.எல்.ஏ.-க்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.
Summary
God need not wait for MLAs and Ministers: Madras High Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









