வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் கோவில்பட்டியில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
Updated on
1 min read

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் கோவில்பட்டியில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. 
சிறு உணவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துராஜா,  லாலா கடை உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம்,  பட்டாசு வியாபாரிகள் சங்கத் தலைவர் பெரியசாமிபாண்டியன், கழுகுமலை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில்,  நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், தொகுப்பு வீடுகள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், திரையரங்கு, தீப்பெட்டி, பட்டாசு ஆலை, விடுதி, பொதுமக்கள் பயன்படுத்தும் தனியார் மண்டபங்களின் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  
9  ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை மதிப்பீட்டில் வாடகையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசு பிறப்பித்துள்ள ஆணையை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். வணிகர்கள் 50 மைக்ரான்களுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு இருந்தும் சில மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் வணிக நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும். 
நகராட்சி, மாநகராட்சி பொறியாளர்களிடம் இருந்து புதிய கட்டடத்திற்கான கட்டுமான உரிமம் முறையாக பெற்றிருந்தாலும் கட்டட உறுதிச் சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து வாங்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (பிப்.6) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து வணிகர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி வெற்றி பெற வழிபெறச் செய்யவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
கூட்டத்தில், செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் வாடகைதாரர் சங்கத் தலைவர் ஜெயராஜ், கோவில்பட்டி மத்திய வியாபாரிகள் சங்கச் செயலர் ஆறுமுகம், நடராஜபுரம் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி, ஜோதி நகர் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கிறிஸ்துராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலச் செயலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். வடக்கு மாவட்டப் பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com