தாமிரவருணி மகா புஷ்கர விழா: ஆத்தூர், முக்காணியில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, ஆத்தூர், முக்காணி, ஏரல் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
Updated on
1 min read


தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி, ஆத்தூர், முக்காணி, ஏரல் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் ஹோமங்கள், கோ பூஜை, தீப வழிபாடு ஆகியவை நடைபெற்றன. குலசேகரன்பட்டினத்துக்கு வெள்ளிக்கிழமை தசரா விழாவுக்காக வந்திருந்த பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் புனித நீராடினர்.
சொக்கப்பழங்கரை கங்கா தீர்த்தக்கட்டத்தில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமஹா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச சத்யஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து அவர் சொக்கப்பழங்கரையில் இருக்கும் சேது விநாயகர், சேதுமாகாளி அம்பாள், கங்கை அம்பாள் ஆலயம் ஆகியவற்றில் தரிசனம் செய்தார்.
அப்போது அவருடன் விழாக்குழு பொறுப்பாளர்கள் ஆறுமுகநயினார், மகராஜன், சீனிவாசன், அன்னபூரணி, அகில பாரதிய கிரஹக் பஞ்சாயத் மாநில பொறுப்பாளர்கள் குலோத்துங்கன் மணியன், சத்யபாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
களியக்காவிளை, அக். 20: திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி தீர்த்தப்படித்துறையில் நடைபெற்று வரும் மஹா புஷ்கரம் விழாவின் 9 ஆவது நாளான சனிக்கிழமை திரளான பக்தர்கள் நீராடினர்.
விழாவையொட்டி, காலையில் சங்கல்ப ஸ்நானம், மகா சுதர்ஸன ஹோமம், நரசிம்ம ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பன்னிரு திருமுறை பாராயணம், தாமிரவருணி நதிக்கு ஆரத்தி உள்ளிட்டவை நடைபெற்றன. சனிக்கிழமை காலையில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் வாரிசு அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமிபாய் தம்புராட்டி விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து முற்பகலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கட்சி நிர்வாகிகளுடன் திக்குறிச்சிக்கு வந்து, தாமிரவருணி ஆற்றில் நீராடினார். இவ் விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து தாமிரவருணி ஆற்றில் நீராடி, மகாதேவரை வணங்கி சென்றனர். மஹா புஷ்கரம் விழா குமரி மாவட்டத்தில் திக்குறிச்சியில் மட்டுமே நடைபெறுவதால் சனிக்கிழமை பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com