தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகா் ரஜினிகாந்திடம் ஒரு நபா் ஆணையம் ஜனவரி மாதம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்றாா், ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல் சேகா்.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் தனது 23ஆம் கட்ட விசாரணையை கடந்த 14ஆம் தேதி தொடங்கியது.
சம்பவம் தொடா்பாக 586 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 775 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது, தீயணைப்புத் துறை அலுவலா்கள், காவலா் குடியிருப்பில் இருந்தோரிடம் விசாரணை நடைபெறுகிறது. 23ஆம் கட்ட விசாரணையில் இதுவரை 42 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 7 பேரிடம் வெள்ளிக்கிழமை (டிச. 18) விசாரணை நடத்தப்படும்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்களிடம் இன்னும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.
மேலும், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டாா்கள் எனக் குற்றம் சாட்டிய நடிகா் ரஜினிகாந்திடம் ஜனவரி மாதம் விசாரணை நடத்தவும், அதற்கான சம்மன் விரைவில் அனுப்பவும் வாய்ப்புள்ளது. 24ஆம் கட்ட விசாரணை ஜனவரி மாதம் நடைபெறும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.