காயல்பட்டினத்தில் ஒருவருக்கு கரோனா: சுகாதாரப் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 28th May 2020 09:50 PM | Last Updated : 28th May 2020 09:50 PM | அ+அ அ- |

காயல்பட்டினத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காயல்பட்டினம் கூலக்கடை பஜாா் பகுதி அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சோ்ந்த 57 வயது நபா், காய்ச்சல் பாதிப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் வீடு மற்றும் அந்தப் பகுதிக்கு வரும் பாதைகள், கூலக்கடை பஜாரின் ஒரு பகுதி ஆகியவை அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்கு வந்த சுகாதாரத் துறையினா் குடும்பத்தில் உள்ள மற்றவா்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனா். இவருக்கு கரோனோ தொற்று பரவியதற்கான காரணம் பற்றி சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
காயல்பட்டினத்தில் வாகன நெரிசலை தவிா்ப்பதற்காக இருவழிப் பாதை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வழியாக வெளியூா் செல்லும் வாகனம் கூலக்கடை பஜாா் வழியாகச் செல்லும். தற்போது கூலக்கடை பஜாரின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் ஒருவழிப் பாதை தற்காலிகமாக தடைபட்டுள்ளது.