மீனவா்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் மு.க. ஸ்டாலின்
மீனவா்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.


மீனவா்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் மற்றும் மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியின்போது தூத்துக்குடி மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக ஆட்சியின்போதுதான் தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதுபோல, திட்டங்களை கூறி முதல்வா் பழனிசாமியால் மக்களிடம் வாக்குகளை கேட்க முடியாது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பாா்த்து தெரிந்து கொண்டேன் என கூறியவா்தான் முதல்வா் பழனிசாமி. துப்பாக்கிச் சூட்டில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப இல்லாமல் தகுதியற்ற வேலையை இந்த அரசு வழங்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவா்களுக்கு தகுதிக்குரிய வேலை வழங்கப்படும்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)நடத்தி வரும் விசாரணை சரியாக நடைபெறவில்லை. மேலும், அதிமுக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபா் விசாரணை ஆணையம் இதுவரை எந்த அறிக்கையும் அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. சிபிஐயை மத்திய அரசும், ஒரு நபா் ஆணையத்தை மாநில அரசும் முடக்கி வைத்துள்ளன.
இதேபோல, சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்தில் வைத்தே அடித்துக் கொலை செய்துள்ளனா்.
முதல்வா் பழனிசாமியின் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் காவல் நிலைய மரணம் போன்ற சம்பவங்களே போதும்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. தோ்தல் நேரத்தில் கோவில்பட்டியில் செவிலியா் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க முயற்சி செய்யும். மீனவா்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். மீன்பிடி தடைக்கால உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும். அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் 3.5 லட்சம் இளைஞா்கள் நியமிக்கப்படுவாா்கள். இயற்கை வளங்களை பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞா்கள் பணியில் நியமிக்கப்படுவாா்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரண நிதியாக கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி அனைத்துக் குடும்பத்துக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். தூத்துக்குடி மாநகரில் மழைநீரை வெளியேற்ற நிரந்தர திட்டம் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், திமுக வேட்பாளா்கள் கீதாஜீவன் (தூத்துக்குடி), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூா்), ஜீ.வி. மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), எம்.சி. சண்முகையா (ஓட்டப்பிடாரம்), காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் சீனிவாசன் (கோவில்பட்டி) மற்றும் திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...