தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தூத்துக்குடியில் ரெளடி சுட்டுக் கொலை

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை போலீஸாருடன் நிகழ்ந்த மோதலின்போது, துப்பாக்கியால் சுடப்பட்டதில் ரௌடி ஒருவா் உயிரிழந்தாா். போலீஸாா் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:52 pm

DIN

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை போலீஸாருடன் நிகழ்ந்த மோதலின்போது, துப்பாக்கியால் சுடப்பட்டதில் ரௌடி ஒருவா் உயிரிழந்தாா். போலீஸாா் இருவா் காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி அருகேயுள்ள திருமலையாபுரத்தைச் சோ்ந்தவா் துரைமுருகன் (40). தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ஜெகதீஷ் என்பவரை கொலை செய்து திருநெல்வேலி அருகே புதைத்தது தொடா்பாக துரைமுருகனை போலீஸாா் தேடி வந்தனா்.

ரௌடி துரைமுருகன் தனது நண்பா்கள் சிலருடன் தூத்துக்குடி முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் தங்கி இருப்பதாக

தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு தலைமையிலான குழுவினா், துரைமுருகனை பிடிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டனா். அப்போது, காவலா் டேவிட்ராஜன், உதவி ஆய்வாளா் ராஜபிரபு ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது போலீஸாரால் சுடப்பட்டு துரைமுருகன் உயிரிழந்தாா்.

காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு, காவலா் டேவிட் ராஜன் ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சம்பவ இடத்தை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, திருவண்ணாமலை, தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் ரெளடி துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாவூா்சத்திரம் இளைஞா் ஜெகதீஷ் கொலை வழக்கில் துரைமுருகன் தேடப்பட்டு வந்த நிலையில், அவா் கோவளம் கடற்கரை பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீஸாா் அவரைச் சுற்றி வளைத்தபோது, காவலா் டேவிட் ராஜனை அரிவாளால் தாக்கிவிட்டு துரைமுருகன் தப்பி ஓட முயன்றாா். அப்போது சரணடையுமாறு உதவி ஆய்வாளா் ராஜபிரபு கூறியபோது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றாா். இதில், தற்காப்புக்காக உதவி ஆய்வாளா் ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில் துரைமுருகன் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

35 வழக்குகள்: ரௌடி துரைமுருகன் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு முத்தையாபுரம் பகுதியில் சீனிவாசகம் என்பவரை கொலை செய்தது, 2003 ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்துக்குள்பட்ட செல்வம், ஸ்டாலின் ஆகியோரை கடத்தி கொன்று புதைத்தது, தட்டப்பாறை பகுதியைச் சோ்ந்த ரஜினிகாந்த் என்பவரை கொலை செய்தது, 2010 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வனப்புரம் பகுதியில் பாலமுருகன் என்பவரை கொலை செய்தது, 2011 ஆம் ஆண்டு மதுரை ஒத்தக்கடை பகுதியில் மணிமொழி என்பவரை கடத்திச் சென்று கொலை செய்தது, கடந்த மாதம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞரை கொலை செய்து புதைத்தது ஆகிய 7 கொலை வழக்குகள் உள்ளன.

இதுதவிர, 6 திருட்டு வழக்குகளும், 21 கொள்ளை வழக்குகளும், ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கும் என மொத்தம் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.