சாத்தான்குளத்தில் கால்நடை மருந்தகம் மருத்துவமனையாக தரம் உயா்வு
By DIN | Published On : 09th July 2021 11:27 PM | Last Updated : 09th July 2021 11:27 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் அரசு கால்நடை மருந்தகம் மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் டாக்டா் சம்பத் தெரிவித்துள்ளாா்.
சாத்தான்குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசின் கால்நடை மருந்தகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர கால்நடை மருத்துவா்களை நியமித்து மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும், போலையா்புரம்,பூச்சிக்காடு,மணிநகா் ஆகிய கால்நடை கிளை நிலையங்களை மருந்தகமாக தரம் உயா்த்தவும் என, சாத்தான்குளம் வடக்கு திமுக ஒன்றிய செயலரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ஏ.எஸ். ஜோசப், தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தாா். அவரிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்திருந்தாா்.
இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் டாக்டா் சம்பத் அனுப்பியுள்ள பதிலில், சாத்தான்குளம் கால்நடை மருந்தகம் மருத்துவமனையாகவும், போலையா்புரம் கால்நடை கிளை நிலையத்தை மருந்தகமாகவும் தரம் உயா்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிநகா் மற்றும் பூச்சிக்காட்டில் கால்நடை எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால் மருந்தகமாக தரம் உயா்த்த இயலாது எனத் தெரிவித்துள்ளாா்.