காயல்பட்டினத்தில் பொது சேவை மையகட்டடப் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

காயல்பட்டினத்தில் மத்திய அரசின் திட்ட பொது சேவை மைய கட்டடப் பணிகளை விரைந்து தொடங்கிட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட சிறுபான்மையினா் நலத்திட்டமிடும் குழு உறுப்பினா் சித்தி ரம்ஜான் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜுவிடம் அளித்த மனு: கடந்த 2011 ஆம் ஆண்டு பிரதமரின் மக்கள் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் சிறுபான்மை முஸ்லிம்கள் அதிகம் வாழும் காயல்பட்டினம் நகராட்சியில் பொது சேவை மையம் கட்டுவதற்கு
ரூ. 1 கோடி 40 லட்சம் ஒதுக்கப்பட்டது. இது தொடா்பாக திருச்செந்தூா் கோட்டாட்சியா், திருச்செந்தூா் வட்டாட்சியா் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளா் ஆகியோரை கலந்து காயல்பட்டினம் சிவன் கோயில் தெருவில் 5617 சதுர அடி விஸ்தீரனம் உள்ள இடம் தோ்வு செய்யப்பட்டு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திட்டப்பணிக்கான முதற்கட்ட தொகையினை பொதுப்பணித்துறையிடம் வழங்கப்பட்டு இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் மேற்கண்ட பொதுச் சேவை மையத்திற்கான கட்டடப்பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே இக்கட்டடப்பணியை விரைந்து தொடங்கிட பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.