தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் சுற்றுச்சுவர் சரிந்ததில் 2 வடமாநில தொழிலாளர்கள் பலி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின் போது சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். 
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின்போது சரிந்த சுற்றுச்சுவர்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின்போது சரிந்த சுற்றுச்சுவர்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியின் போது சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி சுந்தரவேலுபுரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஒப்பந்ததின் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் சுந்தரவேலுபுரம் 2-வது தெருவின் மேற்கு பகுதியில் பாதாள சாக்கடைக்கென குழிக்குள் கம்பி கட்டும் பணியில் என்று சக வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன் மற்றொரு புறம் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை தொடர்ச்சியாக குழி தோண்டும் பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, டி.எஸ்.எஃப் மீன் உணவு ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தையொட்டி ஜே.சி.பி.இயந்திரம் மூலம் குழி தோண்டுகையில் வாகன நிறுத்துமிடத்தின் சுற்றுச்சுவர் பலமிழந்து குழிக்குள் பணிசெய்து கொண்டிருந்த வடமாநில தொவிலாளிகள் மீது சரிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் கம்பிக்கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகிரத் அலி(வயது 21), அமித்(24) ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்த தகவல் உடனடியாக தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி தீயணைப்பு மீட்பு படையினரும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்கள் குறித்து சக தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த பணி மேற்பார்வையாளரிடம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com