தூத்துக்குடியைக் கைப்பற்றிய திமுக! மேயராகிறார் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சியை பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், மேயராக ஜெகன் பெரியசாமி தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 43 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 60 வார்டுகளிலும் போட்டியிட்ட அதிமுக 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.

இதற்கிடையே, சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 ஆவது வார்டு சுப்புலட்சுமி, 14 ஆவது வார்டு கீதா முருகேசன் 37 ஆவது வார்டு பாப்பாத்தி ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதனால், திமுகவின் பலம் 46 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மதிமுக சார்பில் 28ஆவது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமு அம்மாள் திமுக உறுப்பினராகவே கருதப்படுவதால் திமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 47 ஆகும்.

திமுக சார்பில் 20ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகன் பெரியசாமி கட்சியில் தற்போது மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர், மறைந்த திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமியின் மகன் ஆவார். தற்போதைய திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவனின் சகோதரர் ஆவார்.

ஜெகன் பெரியசாமி
ஜெகன் பெரியசாமி

60 வார்டுகளிலும் நன்று அறிமுகமானவர், பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜெகன் பெரியசாமியே மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், மக்களவை உறுப்பினரான கனிமொழியின் ஆசியும் ஜெகன் பெரியசாமிக்கே உள்ளதால் அவரை தவிர வேறு யாருக்கும் மேயராகும் வாய்ப்பு இல்லை.

இதேபோல, துணை மேயர் பதவி மீனவ சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 46 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெனிட்டாவுக்கு துணை மேயர் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், தற்போதைய திமுக அவைத் தலைவர் செல்வராஜின் மனைவி ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com