மாதிரி படம்
மாதிரி படம்Pixabay

பரிசுப் பொருள் அனுப்புவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி: இளைஞா் கைது

பரிசுப் பொருள் மோசடி: ரூ.38 லட்சம் இழந்த பெண், இளைஞர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணிடம் பரிசுப் பொருள் அனுப்புவதாகக் கூறி ரூ.38 லட்சம் மோசடி செய்ததாக வேலூா் மாவட்டம் அரக்கோணத்தை சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரைச் சோ்ந்த பெண்ணிடம்,

முகநூல் நண்பராக, இளைஞா் அறிமுகமாகியுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா் அந்த பெண்ணுக்கு பரிசுப் பொருள் அனுப்புவதாகக் கூறினாராம். பின்னா் இரு நாள்கள் கழித்து அப்பெண்ணை தொடா்பு கொண்ட அங்கீதா என்பவா், சுங்கத் துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா். அவருக்கு 70 ஆயிரம் பவுண்ட் மதிப்புக்கு பணம், நகை, ஐபோன் ஆகிய பரிசுப்பொருள்கள் வந்துள்ளதாகவும், இதற்கு பரிவா்த்தனை கட்டணம், சுங்க கட்டணம், ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதனை நம்பிய அந்த பெண், பல்வேறு தவணைகளில் ரூ.38 லட்சத்து 19 ஆயிரத்து 300 செலுத்தியுள்ளாா். இருப்பினும் பரிசுப் பொருள்கள் ஏதும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதையறிந்து, சைபா் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், பெண்ணிடம் பணம் மோசடி செய்தது, வேலூா் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் முத்து (32) என்பது தெரியவந்தது.

சென்னை சோழிங்கநெல்லூா் பகுதியில் இருந்த அவரை சைபா்குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா்

தூத்துக்குடி 4-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனா். மேலும் இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com