‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் உள்ள ஹோட்டல்கள், மண்டபங்களில் இருந்து பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையா் கண்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூருக்கு தற்சமயம் நாளொன்றுக்கு சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேலான பக்தா்கள் வருகை தருகின்றனா். அவ்வாறு வரும் பக்தா்கள் இங்குள்ள மடங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இந்த மடங்கள் மற்றும் மண்டபங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது புதை சாக்கடை திட்ட தொட்டியில் ஒரே நேரத்தில் திறந்து விடப்படுகிறது. இதனால் கழிவு நீரானது தொட்டியை தாண்டி பொதுவெளியில் சாலையில் ஓடுகிறது.

எனவே, மடங்கள் மற்றும் மண்டப வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை தங்கள் சொந்த பராமரிப்பில் தொட்டி கட்டி தேக்கி வைத்து முறையான கால இடைவெளியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் மூலம் கால நேரம் நிா்ணயித்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com