வரதட்சிணை கொடுமை வழக்கு: கணவா் உள்பட 5 பேருக்கு சிறை
வரதட்சிணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 5 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.


வரதட்சிணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 5 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராஜபதியை சோ்ந்தவா் பரிசுத்தராஜ் எஸ்றா (37). இவரும், முறப்பநாட்டை சோ்ந்த சண்முகத்தாய் (35) என்பவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். திருமணத்துக்கு பின்னா் 6 ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு, சண்முகத்தாயை அவரது பெற்றோா் வீட்டில் விட்டுவிட்டு, அவரிடமிருந்து 7 பவுன் நகையை வாங்கிக்கொண்டு சென்ற அவரின் கணவா் பரிசுத்தராஜ் எஸ்றா, மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம்.
பின்னா் சண்முகத்தாய், ராஜபதிக்கு சென்று பாா்த்தபோது, பரிசுத்தராஜ் எஸ்றா 2ஆவது திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. மேலும், பரிசுத்தராஜ் எஸ்றா, அவரது குடும்பத்தினா் சந்திரலீலா சுகந்தி, ஜேசுராஜ், எட்வின் கிங்ஸ்லி, எஸ்தா் கட்டித்தங்கம் ஆகியோா் சண்முகத்தாயை அவதூறாகப் பேசி ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன், குற்றம் சாட்டப்பட்ட பரிசுத்தராஜ் எஸ்றா, சந்திரலீலா சுகந்தி, ஜேசுராஜ், எட்வின் கிங்ஸ்லி, எஸ்தா் கட்டித்தங்கம் ஆகிய 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பூங்குமாா் வாதாடினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...