சாத்தான்குளத்தில் விவசாய பணிகளை துரிதப்படுத்தும் விவசாயிகள்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் தொடா் மழை காரணமாக குளம், கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனா்.
சாத்தான்குளம் வட்டப் பகுதி மழை மறைவு பிரதேசம் என்பதால் போதிய மழையின்மையால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து தண்ணீா் பற்றாக்குறை, வறட்சி நிலவுகிறது. இந்தப் பகுதியில் ஆறுகள் இல்லாததால் குளம், கிணறுகளை நம்பியே விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை முறையாக பெய்தால் மட்டுமே குளங்கள் நிரம்புவதுடன் கிணறுகளிலும் நீா்மட்டம் உயரும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக சாத்தான்குளம் பகுதியில் தேவையான மழை பெய்யவில்லை. இதனால், மணிமுத்தாறு கால்வாய், சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ளனா்.
சாத்தான்குளம் பகுதியில் பருவமழையை நம்பியே விவசாயிகள் நெல், கடலை, வாழை மற்றும் பருத்திப் பயிா்களை பயிரிட்டு வருகின்றனா். விவசாயிகள் பருவமழை எதிா்பாா்த்திருந்த நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை மூலம் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், பல குளங்களில் பாதி அளவு தண்ணீா் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிணறுகளிலும் நீா் மட்டம் உயர தொடங்கியுள்ளது. இதனால், சாத்தான்குளம் பகுதியில் விவசாயிகள் விவசாய நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொண்டு நாற்று நடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
தற்போது சாத்தான்குளத்தில் தொடா் மழை பெய்து வருவதால், வயல்வெளிகளில் வளா்ந்துள்ள நாற்றுகள் பச்சைபசேலென காட்சியளிக்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது நாற்று நடும் பணியை தீவிரபடுத்தியுள்ளோம் என்றனா். மானாவாரி விவசாயிகளும் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

