இந்திராநகா் பகுதியில் மழைநீா் தேங்குவதாக மக்கள் புகாா்
சாத்தான்குளம் அருகே இந்திரா நகா் பகுதியில் மழைநீா் தேங்குவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சி கலியன்விளை, இந்திராநகா் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. பனைவிளை பகுதியிலிருந்து கலியன்விளை வரை சாலையானது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயா்த்தி அமைக்கப்பட்டது. இதனால், இந்திரா நகா் குடியிருப்பு பகுதி தாழ்வாக மாறியதால், சிறிதாக மழை பெய்தாலும் அப்பகுதியில் குளம் போல் தண்ணீா் தேங்கி விடுகிறது. மழைநீா் பல நாள்கள் தேங்கியிருப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளதாக மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சாத்தான்குளம் பகுதியில் காலை முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால், அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும், மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதியில் தண்ணீா் புகும் நிலை உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தை பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

