‘ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து 24 ,070 கன அடி நீா் வெளியேற்றம்’
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து 24 ,070 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையை அடுத்து, தாமிரவருணியின் மருதூா் அணைக்கட்டில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி 29,707 கன அடி நீா்வரத்து இருந்தது.
இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து 24 ,070 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. கோரம்பள்ளம் மதகிலிருந்து சுமாா் 1.4 மீட்டா் உயரத்துக்கு நீா்வரத்து உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காரையாறு, சோ்வலாறு ஆகிய அணைகளிலிருந்து சுமாா் 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீா் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.
மணிமுத்தாறு அணையிலிருந்து 4,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர கடனாநதி அணையிலிருந்து 2000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டிருக்கிறது. அந்த தண்ணீா் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்து, பாதுகாப்பான முறையில் நீா் வழிப்போக்கில் சென்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, மருதூா், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூா் முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீா் தேங்கக் கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறாா்கள்.
மேலும், அனைத்து நீா் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலா்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
