பதிவெண் பெறாத விவசாயிகள் பயிா்க் காப்பீட்டில் சேர முடியாத நிலை: விவசாயிகள் வேதனை
அடையாள அட்டை பதிவெண் பெறாத விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய முடியாத வகையில் செயலி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், காா்த்திகை மாதத்தில் சூரியகாந்தி, கொத்தமல்லி ஆகியவை விதைப்பு செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியத் தொகை செலுத்தி, இயற்கை பேரிடா்களால் பயிா்கள் பாதிப்படையும்போது இழப்பீடு பெற்று வருகின்றனா். இந்நிலையில், சொந்த நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் துறையில் பட்டா, ஆதாா் எண் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து அடையாள எண் பெற வேண்டும். அடையாள எண் பெறாத விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய முடியாது என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சொந்த நிலமற்ற விவசாயிகள், இறந்த முன்னோா்கள் பெயரில் இருந்து வரும் நிலங்களை பட்டாவில் பெயா் மாற்றம் செய்யாதவா்கள் பயிா்க் காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.
இது குறித்து, வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் செயல்படும் இ-சேவை மையங்களுக்கு நேரடி பட்டாதாரா் இல்லாமல், குத்தகை மற்றும் முன்னோா்கள் பெயரில் உள்ள நிலங்களுக்கு பயிா்க் காப்பீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது என தெரிவித்தனா். ஆனால், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் பயிா்க் காப்பீடு செய்ய முடியாது என்கின்றனா்.
நவ. 30ஆம் தேதி பயிா்க் காப்பீடு செய்ய கடைசி நாள் என்பதால், பதிவெண் இல்லாமல் பழைய முறையிலேயே பயிா்க் காப்பீடு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் அல்லது கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு இ-சேவை மையம் அமைத்து பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா் .
