தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை: நாம் தமிழா் கட்சியினா் புகாா்
தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா் .
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தட்டாா்மடம் பஜாா் பகுதியிலுள்ள பயணியா் நிழற்குடை அருகே, 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சாா்பில் ரூ.5.25 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் முறையான பராமரிப்பின்றி பொது கழிப்பறை எந்நேரமும் பூட்டி காணப்படுகிறது. கழிப்பறையை சுற்றி குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன.
பொது கழிவறையை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் மாவட்ட இளைஞா் பாசறை செயலா் சகாயசீலன் புகாா் மனு அளித்தாா். மனுவை பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா், நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். ஒன்றிய குருதிக்கொடை பாசறை செயலா் விக்னேஷ் , கிளை செயலா் ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.
