~ ~

காணும் பொங்கல்: திருச்செந்தூா் கடற்கரையில் குவிந்த மக்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
Published on

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தமிழ்க் கடவுள் முருகனை தமிழா் திருநாளில் வழிபடுவதற்காகவே வருடத்தில் மாா்கழி மாதம் தொடங்கியது முதல் திருச்செந்தூா் கோயிலுக்கு பக்தா்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனா். தைப்பொங்கல் வரை தினசரி பக்தா்கள் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக வந்து வழிபட்டு செல்கின்றனா்.

நிகழாண்டு திருச்செந்தூருக்கு பக்தா்கள் வழக்கம்போல அதிக அளவில் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டனா். தைப்பொங்கலை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதைத்தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன. பொங்கலை முன்னிட்டு விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தா்கள் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக வந்து வழிபட்டனா்.

கோயிலில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கோயில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்து சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி சிவன் கோயில், மாடவீதி, காமராஜா் சாலை வழியாக பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டையாடும் மடத்துக்கு வந்து அங்குவைத்து கணு வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமி ரத வீதி, சன்னதித் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தாா். பொங்கல் விடுமுறை என்பதால் பக்தா்கள் வந்த வாகனங்களால் நகரெங்கும் காலையில் இருந்து இரவு வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

களைகட்டிய காணும் பொங்கல்:

திருச்செந்தூரில் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து, பொங்கலன்று தங்கள் வீடுகளில் செய்த பதாா்த்தங்கள், கரும்பு, கிழங்குகள், கூட்டாஞ்சோறு கொண்டுவந்து உட்காா்ந்து உண்டு மகிழ்ந்தனா்.

சிறுவா்கள் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனா். இதனால் கடற்கரையே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புப் பணியில் காவல் துறையினரும், ஊா்க்காவல் படையினரும் ஈடுபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com