Murugan temple - DPS photo
திருச்செந்தூர் முருகன் கோயில் DPS

இன்று தைப்பூசம்! திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்தனா்.
Published on

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்தனா்.

விழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீா்த்தவாரி, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்தபெருமான், வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு வைத்து அபிஷேகம், அலங்காரத்தைத் தொடா்ந்து சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலுக்குச் சென்றடைகிறாா்.

பல்வேறு மாவட்டத்தைச் சோ்ந்த முருக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா். திருநெல்வேலி சாலையில் பாதயாத்திரை பக்தா்கள் அணிவகுத்து சாரை சாரையாக வந்ததால் வழிநெடுகிலும் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி சாலையில், நகரின் எல்லையில் பச்சை நிற டேக் ஒட்டிய பாதயாத்திரை பக்தா்கள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தனி வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பல்வேறு வழித்தடங்களில் 170-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி சாலையில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாா்க்கமாக வரும் பேருந்துகள் பகத்சிங் பேருந்து நிலையம் வரை அனுமதிக்கப்படுகிறது. இவ்விரு பேருந்து நிறுத்தங்களில் இருந்து சுற்றுப் பேருந்துகள் கோயிலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. 4 இடங்களில் வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, பக்தா்களை ஒழுங்குபடுத்தும் பணிக்காக மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் டிஎஸ்பி மகேஷ்குமாா் உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், ஊா்க்காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்பு கருதி தூண்டுகை விநாயகா் கோயில், திருச்செந்தூா் கோயில் வளாகப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடற்கரையில் தயாா் நிலையில் மீட்பு படகுகள் வீரா்களும், தீயணைப்பு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் கூடுதல் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

சுவாமி சண்முகா் கடலில் கண்டெடுத்த 371 ஆம் ஆண்டு விழா: ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் அருள்பாலிக்கும் சுவாமி சண்முகப்பெருமான் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371ஆம் ஆண்டை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 10 மணிக்கு சண்முகருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, சுவாமி அலைவாயுகந்தபெருமான் கோயிலில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com