கோவில்பட்டி அருகே தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பரமன் மகன் வெங்கடேஷ் (45). தொழிலாளியான இவா் சனிக்கிழமை தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது பொது குழாயில் அதே பகுதியைச் சோ்ந்த முரளி (24) தனது இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை வெங்கடேஷ் கண்டித்தாராம். இதனால் ஏற்பட்ட தகராறில் முரளி, வெங்கடேஷை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டாராம்.
இதில், காயம் அடைந்த வெங்கடேஷ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முரளியை கைது செய்தனா்.