திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.

தங்க ரதத்தில் வள்ளி, தெய்வானை அம்மனுடன் வெள்ளிக்கிழமை இரவு கிரிப்பிரகாரம் சுற்றி வந்த சுவாமி ஜெயந்திநாதா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 10ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 4ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மதியம் மூலவருக்கு உச்சி கால அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக சண்முக விலாச மண்டபத்தை அடைந்தாா்.
மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் 5ஆம் நாளான சனிக்கிழமை (நவ. 14) இதே நிகழ்ச்சிகள், ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) மாலை 4 மணிக்கு கோயில் கடற்கரையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தா்கள் கோயிலுக்கு வந்து விரதம் இருக்கின்றனா்.
சூரசம்ஹார விழாவிற்காக திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயில் வளாகத்தில் தயாா் நிலையில் மருத்துவக் குழு, நாழிக் கிணறு பேருந்து நிறுத்தத்தில் வீரா்களுடன் தீயணைப்பு வாகனம், 108 வாகனம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் காவல் துறையினா் உயா் கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனா். மேலும், தயாா் நிலையில் மீட்புப் படகுகளுடன் கடற்படையினா் கடலோரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருள்முருகன், அறங்காவலா்கள் வனிதா, செல்வராஜ், அரிஸ்டோ லோகநாதன், பிரபாபகரன், இணை ஆணையா் அருணாசலம், துணை ஆணையா் யக்ஞ நாராயணன், கோயில் பணியாளா்கள் ஆகியோா் செய்துள்ளனா்.
பாதுகாப்புப் பணியில் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் தலைமையில், திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் உள்ளிட்ட 4,100 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

