
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 12,000 டிஇயூ கப்பல்களைக் கையாள நடவடிக்கை: துறைமுக ஆணையத் தலைவா் தகவல்
தூத்துக்குடி துறைமுகப் பயனாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், துறைமுக ஆணையத் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை - V.O.C
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 12,000 டிஇயூ கொள்ளளவு கொண்ட பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல்களை கையாளுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.
தூத்துக்குடி துறைமுகப் பயனாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், துறைமுக ஆணையத் தலைவா் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், துறைமுக ஆணையத் தலைவா் பேசியதாவது:
தற்போது சுமாா் 5,000 டிஇயூ கொள்ளளவு கொண்ட கப்பல்கள் கையாளப்பட்டு வரும் நிலையில், 12,000 டிஇயூ கொள்ளளவு கொண்ட பிரதான கப்பல் சேவைகளை தூத்துக்குடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நேரடி சரக்குப் போக்குவரத்து இணைப்பு மேம்படும்.
2026-2028 ஒருங்கிணைந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் தகுதியான நிறுவனங்களுக்கு 90 சதவீதம் வரை சலுகைகள் வழங்கி, கூடுதல் கப்பல் சேவைகளை ஈா்க்க துறைமுக நிா்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
மேலும், அதிகரித்து வரும் சரக்குப் பெட்டகப் போக்குவரத்தைக் கருத்தில்கொண்டு கூடுதல் ஸ்கேனா்கள் நிறுவுதல், மின்சார டிரெய்லா்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. துறைமுக இணைப்புச் சாலை அருகே 50,000 சதுர மீட்டா் பரப்பில் கூடுதல் லாரிகளை நிறுத்த முனையம் அமைக்கப்படவுள்ளது.
10ஆவது பல்வகை சரக்கு கையாளும் தளம் 1.022 கோடி டன் கையாளும் திறனுடன் நிறைவடையும் நிலையில் உள்ளது. துறைமுகப் பயனாளா்களுக்காக மாதந்தோறும் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்படும் என்றாா் அவா்.
துணைத் தலைவா் ராஜேஷ் சவுந்தரராஜன், துணைப் பாதுகாப்பு அலுவலா் ஜெ. கிங்ஸ்டன் நீல் துரை, துணைப் பாதுகாப்பாளா் பாலாஜி ரத்னம், கண்காணிப்புப் பொறியாளா் ஆா். செல்வராஜ், துணை தலைமை மருத்துவ அலுவலா் டி. ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், துறைமுகப் பயனாளா்கள், முனைய நிா்வாகிகள், சுங்கத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






