திருச்சி, ஜூன் 7: அரசு ஒப்பந்தத்தின் காரணமாக ஆண்டில் 6 மாதங்களுக்கு அரைவை மேற்கொள்ள வாய்ப்பு இல்லாததால், மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகின்றன தனியார் அரிசி அரைவை ஆலைகள்.
தமிழகம் முழுவதும் சிறியதும், பெரியதுமாக 600-க்கும் மேற்பட்ட அரிசி அரைவை ஆலைகள் உள்ளன. நெல்லை தொட்டியில் ஊற வைத்து, பின்னர் காய வைத்து அரைக்கும் பணி நடைபெற்றதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்புதான். தற்போது அரைவை ஆலைகள் எல்லாம் நவீனமயமாகி வருகின்றன.
நெல்லை ஊற வைத்தப் பின்னர், காய வைப்பது முதல் குருணை, தவிடு போன்றவற்றைத் தரம் பிரித்து அரிசியாக வரும் வரையிலான பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் வகையில் நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன.
எனவே, மற்ற ஆலைகளோடு போட்டிப் போடுவதற்கு ஏற்றவகையில் தங்களது ஆலைகளையும் நவீனப்படுத்தும் வகையில் மற்ற ஆலைகளும் தயாராகி வந்தாலும் அதற்காக செலவாகும் தொகையைக் கண்டுதான் அஞ்சுகின்றன.
ஆந்திர மாநில அரசு அந்த மாநிலத்தில் அரிசி ஆலைகள் நவீனமயமாக்குவதற்கு வழங்கப்படும் கடன் தொகையில் 50 சதத்தை மானியமாக வழங்குகிறது.
தமிழகத்தில் அந்தளவு வழங்கப்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட அளவாவது மானியத்துடன் கடன் வழங்கினால் நாங்களும் ஆலைகளை நவீனப்படுத்தி, தொழிலை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அரைவை ஆலைகள் உரிமையாளர்களிடம் உள்ளது.
அரைவை கூலி குறைவு: இந்திய உணவுக் கழகம் வழங்கும் நெல்லை அரைவை செய்வதற்கு தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனக்குச் சொந்தமான 22 அரைவை ஆலைகள் போக, மீதமுள்ள நெல்லை தனியார் அரிசி ஆலைகளுக்கு வழங்கி வருகிறது.
ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் நெல் வந்தால் தனியார் அரைவை ஆலைகளுக்கு 3 முதல் 5 லட்சம் டன் நெல் வரை அரைவை செய்துத் தருவதற்கு வழங்கப்படும்.
ஆனால், இவ்வாறு அரைவை செய்து வழங்குவதற்கு 100 கிலோ நெல் மூட்டைக்கு தனியார் அரைவை ஆலைகளுக்கு ரூ. 25 மட்டுமே வழங்கப்படுகிறதாம்.
கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து இதே தொகைதான் வழங்கப்படுகிறது. ஆனால், 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு நெல் மூட்டைகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி உயர்ந்திருக்கிறது, ஆலைகளுக்கான மின்
கட்டணம், இயந்திரங்கள் பராமரிப்பு, நிர்வாகச் செலவு போன்றவை உயர்ந்திருக்கின்றன.
இதைவிட அரைவை ஆலையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. 2005-ல் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்ட சல்லடை தற்போது ரூ.100 முதல் ரூ. 120 வரை விலை உயர்ந்துள்ளது. இதுபோல இன்னும் பல பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
எல்லா பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் அரைவைக்கு வழங்கும் தொகையை மட்டும் இன்னமும் உயர்த்தாமல் உள்ளதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம் என்கிறார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் அரைவை முகவர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் துணைத் தலைவர் புலியூர் ஏ. நாகராஜன்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்க தேவைப்படும் அரிசியின் மொத்த அளவில் 70 சதத்தை இந்திய உணவுக் கழகம் வழங்குகிறது. மீதமுள்ள 30 சதத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் நெல்லைத்தான் தனியார் அரைவை ஆலைகள் அரைத்து வழங்க வேண்டியுள்ளது. இந்திய உணவுக் கழகம் அரிசியாகவே நேரடியாக வழங்கி விடுவதால் எங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது.
உணவுக் கழகம் வழங்கும் அரிசிக்குப் பதிலாக நெல்லை வழங்கினால் அரைவை ஆலைகள் தொடர்ந்து இயங்குவதற்கு வழி பிறக்கும். மக்களுக்கும் உடனடியாக தாமதமின்றி அரிசி கிடைக்கும் என்றார் நாகராஜன்.
6 மாதங்கள் வேலை இல்லை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சம்பா காலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மட்டுமே வழங்குகிறது. இதனால் பிப்ரவரி முதல் ஜூன், ஜூலை மாதங்கள் வரையிலான காலத்தில் மட்டுமே அரசுக்கு நெல்லை அரைத்துத் தரும் அரவை ஆலைகள் இயங்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
இப்படி குறிப்பிட்ட காலம் மட்டும் அரைவை ஆலைகள் இயங்குவதால் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. சில ஆண்டுகளில் மட்டும்தான் குறுவை நெல் அரைவைக்கு வருகிறது. மற்ற ஆண்டுகளில் இந்த நேரத்தில் நெல் அரைவை இருப்பதில்லை.
எனவே, எல்லாக் காலத்திலும் நெல் அரைவை ஆலைகள் இயங்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மத்திய உணவுக் கழகத்திடமிருந்து நெல்லை வாங்கி, அரைவை ஆலைகளுக்கு வழங்க வேண்டும் என்கின்றனர் அரைவை முகவர்கள்.
தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் அரைவை செய்வதற்காக அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போதே அரசுக்குரிய நெல்லை மட்டும்தான் அரைத்துக் கொடுக்க வேண்டும், தனியாருக்கு நெல் அரைத்துத் தரக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிப்பதால், 6 மாதங்கள் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் வரும் நெல்லை அரைத்துக் கொடுக்கிறோம். மற்ற 6 மாதங்களில் ஆலையில் எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக இந்திய உணவுக் கழகத்திடமிருந்து அரிசியாக வாங்காமல், நெல்லாக தமிழக அரசு வாங்கினால் அதனை அரைவை செய்து கொடுக்கும் பணி பல ஆலைகளுக்கு கிடைக்கும். இதன் மூலம் தொடர்ந்து ஆலைகள் இயங்குவதற்கு வழியும் பிறக்கும் என்கின்றனர் அரைவை முகவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.