திருச்சி, ஜூன் 16: திருச்சி மாவட்டத்தில் ரூ. 5.5 கோடியில் 120 கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர்த் திட்டப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு வகையான திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.
குறிப்பாக சுகாதாரத்துக்கும், குடிநீருக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையிலான திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையிலும், பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகத் தொடர்ந்து அலையும் அவலமும், மாநகரத்தின் பல பகுதிகளில் இன்னும் மாநகராட்சி லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படும் நிகழ்வும் தொடர்ந்து வருகின்றன.
இப்படி சரிசமமான நிகழ்வுகள் மாவட்டத்தில் நிகழ்வது ஒருபுறம் இருந்தாலும், கிராமப்புறங்களுக்கு பல்வேறு வகையான திட்டங்களின் கீழ் குடிநீரை வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர்த் திட்ட கோட்டம் மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் ரூ. 5.5 கோடியில் தனி மின் விசைத் திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்குவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராமங்கள் தேர்வு எப்படி?: கிராமத்தின் மக்கள் தொகை, அந்தக் கிராமத்தின் குடிநீர்த் தேவை அளவு எவ்வளவு, கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை எவ்வாறு இருக்கிறது என்பதையெல்லாம் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு கிராமங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
அதுபோல, நகரத்தையொட்டியுள்ள கிராமங்களில் வளர்ச்சியடைந்த பகுதிகள் நிறைய உள்ளன. இந்தப் பகுதிகளிலும் குடிநீர் வசதியை வழங்கும் வகையில் இத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஒன்றியம் வாரியாக கிராமங்களைத் தேர்ந்தெடுக்கும் பணி கடந்தாண்டிலேயே மேற்கொள்ளப்பட்டு, அந்தக் கிராமங்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு, துறை ரீதியான அனுமதியும் பெறப்பட்டு விட்டது.
திட்டத்துக்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதால் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர்த் திட்ட கோட்டம்.
இத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் கிராமங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து, அக்கிராமத்தின் தண்ணீர் தேவைக்கேற்றவாறு 10,000 லிட்டர் முதல் 60,000 லிட்டர் வரை அளவில் எந்தளவு தேர்வு செய்யப்படுகிறதோ, அந்தளவில் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி கட்டப்படும்.
இவ்வாறு கட்டி முடிக்கப்படும் குடிநீர்த் தேக்கத் தொட்டிகளின் மூலமாக அக்கிராமத்தில் புதிய குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டு, அதன் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.
மாவட்டத்தில் 120 கிராமங்களில் புதிய குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இதுவரை 80 கிராமங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் விடப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள கிராமங்களுக்கும் ஒப்பந்தப்புள்ளி விரைவாக விடப்பட்டு, ஒரு மாதத்துக்குள் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்கும் என குடிநீர் வடிகால் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.