திருச்சி, மே 25: போதிய மழையின்மை, போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் எலுமிச்சை சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது.
ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு மருத்துவக் குணத்தைக் கொண்டிருக்கும். ஆனால், எலுமிச்சை பழத்தில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளன. மேலும், இந்தப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், சிட்ரஸ் என உடலுக்குத் தேவையான அத்தனை மூலக்கூறுகளும் இருக்கின்றன.
செரிமானத்தை ஆரோக்கியமாக்குதல், உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருள்களை வெளியேற்றுதல் என எண்ணற்ற மருத்துவப் பயன்பாடுகளும் எலுமிச்சையில் உள்ளன.
மருத்துவப் பயன்பாடுகள் அதிகம் கொண்ட எலுமிச்சை திருச்சி மாவட்டத்தில் துறையூர் பகுதியில் சிக்கத்தம்பூர், கோட்டாத்தூர், பெருமாள்பாளையம், உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மாரமரெட்டிப்பாளையம், திருப்பட்டூர், லால்குடி வட்டத்தில் ரெட்டிமாங்குடி உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் நாரணமங்கலம், ஆலத்தூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்கள்,புதுக்குறிச்சி, காரை, தெரணி, டி. களத்தூர், அரும்பாவூர், செட்டிக்குளம் என பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
குறைந்தது எலுமிச்சை சாகுபடி: தமிழகத்தில் எலுமிச்சை சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளான திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 40,000 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்னரே 21,000 ஏக்கராக அது குறைந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட போதிய மழையின்மை, போதிய விலை கிடைக்காதது, எலுமிச்சை சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளாதது போன்ற காரணங்களால் எலுமிச்சை சாகுபடி பரப்பளவு தற்போது மேலும் 50 சதம் குறைந்துவிட்டது.
எலுமிச்சை பயிரிட்டுள்ள பகுதியில் 6 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடுமையான கோடை வறட்சியின் காரணமாக தண்ணீர் பாய்ச்சுவதில் பாதிப்பு, எலுமிச்சைக்கு முன்பு போல நல்ல விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் எலுமிச்சை சாகுபடி குறைந்து விட்டது என்கின்றனர் விவசாயிகள்.
மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் மா, நெல்லி, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. ஆனால், அதிக மருத்துவக் குணங்கள் கொண்ட எலுமிச்சை சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற புகார் நிலவுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பலமுறை எடுத்துரைத்தோம். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அரசு எந்தவித உத்தரவையும் வெளியிடவில்லை என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம்.
இதுபற்றி அவர் மேலும் கூறியது:
"பல்வேறு பழங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட எலுமிச்சை குறித்து மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் எலுமிச்சை பழத்தை முன்னுரிமைப் பட்டியலில் கொண்டு வந்து, முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். எலுமிச்சையின் மகத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
எலுமிச்சை சாகுபடி குறைந்ததற்கான காரணங்களில் முக்கியமாக இருப்பது பழத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்படாததுதான். ஆண்டில் 280 நாள்களில் குறைந்த விலையில்தான் எலுமிச்சை விற்பனை செய்யப்படுகிறது. 5 பைசா முதல் 50 பைசா வரையிலான விலையே கிடைக்கிறது.
விற்பனை அதிகம் நடைபெறும் காலங்களில் மட்டுமே ரூ.1 வரை பழத்துக்கு விலை கிடைக்கிறது. எனவே, அரசு எலுமிச்சைக்கும் ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்றார் ராஜா சிதம்பரம்.
தரமற்ற எலுமிச்சை கன்றுகள்: தமிழக விவசாயிகள் ஆந்திர மாநிலத்திலிருந்து எலுமிச்சை கன்றுகளை சாகுபடிக்காக வாங்கி வந்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது வழங்கப்படும் கன்றுகள் சரியாக இல்லை. வியாபார நோக்கில் அந்த நிறுவனம் செயல்படுவதால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எலுமிச்சை கன்று பயன்படுவதில்லை.
எனவே, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளின் மூலமாக வீரியமிக்க எலுமிச்சை கன்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கினால் சாகுபடி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
சென்ற ஆண்டில் விவசாயிகளுக்கு எலுமிச்சை பழம் மூலம் நல்ல விலை கிடைத்து வந்தது. எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 5 வரை விற்பனையானது. ஆனால், இந்தாண்டு விளைச்சலில் பாதிப்பு இல்லை என்றாலும், சென்ற ஆண்டைப் போல இல்லை என்கின்றனர் விவசாயிகள். மேலும், தங்களுக்கு போதிய விலையும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வரத்தும் குறைந்தது: திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சீசன் காலத்தில் தினமும் 1000 முதல் 1200 மூட்டைகள் வரை எலுமிச்சை வரத்து இருந்தது. ஆனால், தற்போது 600 முதல் 700 மூட்டைகள்தான் வரத்து உள்ளது'என்கின்றனர் வியாபாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.