தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுமா?

மன்னார்குடி, அக். 8: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்களை இணைத்து, ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட வேண்டும் என

Updated On :20 செப்டம்பர் 2012, 4:16 pm

மன்னார்குடி, அக். 8: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்களை இணைத்து, ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  மன்னார்குடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 1,2, சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 1918-ம் ஆண்டு முதல் கீழவடம்போக்கித் தெருவில் நீதிமன்றம் செயல்படத் தொடங்கியது.

   இந்த நீதிமன்றத்தின் அருகிலேயே கடந்த 1972-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டு, கோட்ட குற்றவியல் நீதிமன்றம் 1 செயல்பட்டு வருகிறது. மேலும், குற்றவியல் நீதிமன்றங்கள் 1, 2 ஆகியவற்றில் நிர்வாக நீதிபதி என அழைக்கப்படும் வட்டாட்சியர் பயிற்சிக்கான சிறப்பு நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

   1996 ஆண்டு திருவாரூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட காலம் முதல் மன்னார்குடி, வடுவூர், நீடாமங்கலம், பாமணி, திருக்களர், களப்பாள் ஆகிய 6 காவல் சரகத்திற்கு உள்பட்ட வழக்குகள் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-லும், பரவாக்கோட்டை, பெருகவாழ்ந்தான், தலையாமங்கலம், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 காவல் சரகத்தில் பதிவாகும் வழக்குகள் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-லும் விசாரணைக்கு வருகின்றன.

   சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடியில் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மூன்றாம் தெருவில் செயல்பட்டு வருகிறது. மன்னார்குடி, நீடாமங்கலம் வட்டங்களுக்கு உள்பட்ட சிவில் வழக்குகள் இதில் விசாரணைக்கு வருகின்றன. இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியில் வட்ட சட்டப் பணிகள் ஆலோசனைக் குழு அலுவலகமும் இயங்கி வருகிறது.

  குற்றவியல் வழக்குகளில் 3 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெறுபவர்களின் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு நாகப்பட்டிணத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 70 சத மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மன்னார்குடிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாவதும், இந்த வழக்குகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள், வழக்குரைஞர்கள் அடிக்கடி நாகை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருப்பது உள்ளிட்ட காரணங்களால், மன்னார்குடியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து, கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மன்னார்குடியில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் முதல் தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீரேற்றும் நிலையத்தின் கீழ்தளத்தில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

   மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய 5 வட்டங்களுக்கு உள்பட்ட கொலை வழக்கு தவிர்த்து, ஏனைய குற்ற வழக்குகள் அனைத்தும் மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த நீதிமன்றம் மன்னார்குடியில் தாற்காலிக அனுமதியுடன் செயல்பட்டு வருவதால், ஆண்டுதோறும் காலநீட்டிப்பு உத்தரவு பெற வேண்டியுள்ளது.

   குற்றவியல் நீதிமன்றம் 2, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்ற கட்டடங்கள் பழமையானதாக இருப்பதால் மேல்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்கள் சேதமடைந்தும் உள்ளன. இதனால், மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், வழக்கு ஆவனங்களை சேதமடையாமல் பாதுகாக்க உழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அமரும் மரத்தாலான இருக்கைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

   மன்னார்குடியில் உள்ள 4 நீதிமன்றங்களிலும் போதிய வசதி இல்லை. மாவட்ட உரிமையியல் நீதிபதி தவிர, மற்ற நீதிபதிகளுக்கு குடியிருப்பு வளாகங்கள் அமைக்கப்படவில்லை. நீதிமன்றங்கள் வேறுவேறு இடங்களில் இருப்பதால் வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் கால விரயமும், அதிக பொருள் செலவும் ஏற்படுகிறது.

  மேலும், நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்கள் காத்திருக்க போதுமான இடம், பொது சுகாதார வளாகம், வாகன நிறுத்தம் என எந்த வசதியும் இல்லை.

    இந்த நிலையில், மன்னார்குடி மேலபாலத்தில் அரசுக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அமைக்கக் கோரி, மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரிடம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் கே. கல்யாணராமன், மூத்த வழக்குரைஞர் செ. இளங்கோவன் ஆகியோர் மனு அளித்தனர்.

    எனவே, நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை விரைவில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.