/

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் சாத்தியமா?

துறையூர், அக். 9: துறையூர் அருகேயுள்ள புளியம்பட்டியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்ட தண்ணீருக்கு எங்கே செல்வது, அதனால், இந்தத் திட

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:49 pm

என். கணேஷ்சங்கர்

துறையூர், அக். 9: துறையூர் அருகேயுள்ள புளியம்பட்டியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்ட தண்ணீருக்கு எங்கே செல்வது, அதனால், இந்தத் திட்டம் சாத்தியப்படுமா  என்று கேள்வி எழுப்புகின்றனர் இக் கிராம மக்கள்.

    துறையூர் ஒன்றியத்தில் உள்ளது முத்தியம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் அடங்கும். 1996-ம் ஆண்டு இந்த ஊராட்சியில் காவிரிக் கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால், முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம் கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைத்தது.

   ஆனால், இதே ஊராட்சி நிர்வாகத்திற்குள்பட்ட புளியம்பட்டி கிராமத்திற்கு இதுவரை காவிரி குடிநீர் வசதி செய்யப்படவில்லையாம்.

    பயன்பாட்டுக்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்களிலும் போதுமான குடிநீர் வருவதில்லை. நல்லியம்பாளையம் கிராம எல்லையில் ஓரிடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதனருகில் நீரேற்றும் அறை அமைத்து, அங்கிருந்து  புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை நீர் எடுத்துச் செல்ல குழாயும் மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து அமைக்கப்பட்டது.

   இதனால், விரைவில் குடிநீர்ப் பற்றாக்குறை நீங்கிவிடும் என்று நம்பியிருந்த மக்கள், இதற்கு மின் வசதி செய்து மின் மோட்டார் அமைக்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வார்டு உறுப்பினர் காமராஜ் கூறியது:

   மின் வசதி ஏற்படுத்த தேவையான ஆவணங்களை ஒப்பந்ததாரரிடம் கொடுத்துள்ளோம். அவர் இதுபோன்று 5, 6 இடங்களில் பணிகள் செய்கிறார். அப் பணி முடிந்தவுடன் ஒரே நேரத்தில் மின் மோட்டாரை வாங்கி பொருத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அப் பணி முடிந்தவுடன்தான் மேல்நிலைத் தொட்டியில் நீரேற்ற முடியும் என்றார்.

   அப் பகுதியைச் சேர்ந்த தேமுதிக மாவட்ட வழக்குரைஞர் அணி துணைச் செயலர் கே. செல்லதுரை கூறியது:

    இந்தக் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எந்தத் திட்டம் வந்தாலும் அதை முத்தியம்பாளையத்தில் முதலில் நிறைவேற்றிவிட்டு, கடைசியாக இங்கு செய்கிறார்கள். ஆனால், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஊராட்சிக்கு 38 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில் 34 வீடுகள் புளியம்பட்டிக்கும், 4 வீடுகள் நல்லியம்பாளையத்துக்கும் ஒதுக்கினர்.   இப் பகுதி மக்கள் குடிக்கவே போதிய நீரின்றி சிரமப்படும் நிலையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டப் பயனாளிகள் நீரின்றி கட்டுமானப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினார் செல்லதுரை.    எனவே, கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் விரைவில்

நீரேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கவும், முத்தியம்பாளையம் ஊராட்சியில் உள்ள புளியம்பட்டி கிராமத்திற்கும் காவிரி குடிநீர் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின்

எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.