சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தரமற்ற இறைச்சி விற்பனை தடுக்கப்படுமா?

கரூர், அக்.26: கரூர் நகராட்சிப் பகுதியில் கால்நடை மருத்துவரின் சான்றொப்பம் இல்லாத இறைச்சி விற்கப்படுவதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   மனிதர்களில் பெரும்பா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:57 pm

எஸ்.​ முத்​துக்​கு​மார்

கரூர், அக்.26: கரூர் நகராட்சிப் பகுதியில் கால்நடை மருத்துவரின் சான்றொப்பம் இல்லாத இறைச்சி விற்கப்படுவதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மனிதர்களில் பெரும்பாலானோர் அசைவப் பிரியர்களாக உள்ளனர். சைவம் சாப்பிடுபவர்கள் காய்கறிகளை வாங்கிச் சுத்தம் செய்வதோடு, நோய் தாக்கிய காய்கறிகளை விலக்கிவிட்டு சமையல் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், அசைவம் வாங்கும்போது இதைக் கண்டுபிடிக்க வழியில்லை.

  வாங்கப்படும் இறைச்சியில் நோய்த் தாக்குதல் உள்ளதா, உண்ணக்கூடிய வகையில் அது உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. மருத்துவர்களால் மட்டுமே இது முடியும்.

  இதனால்தான் நகராட்சிகளில் ஆடுவதைக் கூடங்கள் திறக்கப்பட்டன. பின்னர், இவை ஆட்டிறைச்சிக் கூடங்களாக பெயர் மாற்றப்பட்டன. இவ்வாறான ஆட்டிறைச்சிக் கூடம், கரூர் நகராட்சியில் பாலம்மாள்புரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்

50 லட்சத்தில் கட்டப்பட்டு, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது.

  நகராட்சிக்குள் சுமார் 50 கடைகளில் ஆட்டிறைச்சியும், கோழி இறைச்சியும் விற்கப்படுகின்றன. மாட்டிறைச்சியும், பன்றிக் கறியும்கூட விற்கப்படுகின்றன.

   இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள் பாலம்மாள்புரத்திலுள்ள ஆட்டிறைச்சிக் கூடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருக்கும் கால்நடை மருத்துவர் ஆடுகளைப் பரிசோதித்து, நோயற்ற ஆடுகள்தான் என்பதை உறுதி செய்த பின்னரே, ஆடுகளை அறுக்க அனுமதிப்பார். பின்னர், வெட்டப்படும் ஆடுகள் கடைகளுக்கு எடுத்து வரப்பட்டு, விற்கப்பட வேண்டும் என்பது நடைமுறை.

  கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட ஆடுதான் என்பதற்கு அடையாளமாக, ஆட்டின் தொடையில் ஒரு குறியீடு இடப்பட்டிருக்கும். இந்தக் குறியீடு உள்ள ஆட்டுக் கறியை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

  ஆனால், இந்த நடைமுறை எதுவும் கரூரில் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

   தொலைவிலிருக்கும் ஆட்டிறைச்சிக் கூடம், போதுமான கால்நடை மருத்துவர்கள் இன்மை, உரிய நேரத்தில் அவர்கள் வராமை, நகராட்சியின் தொடர் கண்காணிப்பு இல்லாதது, ஆடு வெட்ட கூடுதல் வரி, நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

  இந்த விஷயத்தில் கரூர் நகராட்சியும் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், வரி வசூலிப்பதில் ஏலம் விடப்பட்டது தொடர்பாக ஏலம் எடுத்தவர் வழக்குத் தொடுத்திருந்தார். எனவே, நகராட்சி வரி மட்டுமே வசூலித்தது.

  ஆடுகள் வெட்டப்படும் இடத்திற்கோ, கறிக்கடைக்கோ சென்று வெட்டப்படும் ஆடுகளைப் பரிசோதித்தது இல்லை. இதனால், வெட்டப்படும் ஆடுகளுக்கு குறைந்தபட்ச வரியைச் செலுத்தும் கறிக் கடைக்காரர்கள், தங்களின் விருப்பம்போல கறிகளை விற்று வந்தனர்.

  நல்ல தரமான கறி பெரிய, பெரிய ஹோட்டல்கள், வீடுகளுக்கும், தரமற்ற கறி சிறிய கடைகளுக்கும் குறைந்த விலையில் விற்கப்பட்டு மக்களைச் சென்றடைகிறது. இதனால், கரூர் பகுதியில் இவ்வகை கறியைச் சாப்பிடும் பெரும்பாலானோருக்கு வாந்தி-பேதி உள்ளிட்ட நோய்கள் உடனடியாக ஏற்படுகின்றன.

   இதுகுறித்து கரூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியது:

  திங்கள்கிழமைகளில் மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளின் பிரச்னை வாந்தி-பேதி, வயிறு சம்பந்தப்பட்டதுதான். இதற்குக் காரணம் மாமிச உணவுகளும், அவற்றில் சேர்க்கப்படும் மாசாலாவும்தான். பொதுவாக, சுத்தமில்லாத மாமிச உணவுகளை உண்போருக்கு வாந்தி-பேதி ஏற்படும்.

   சரியாகச் சமைக்காமல் சாப்பிடும்போது கறியிலுள்ள புழுக்கள் இறக்காமல், மனிதனின் மூளைக்குள் சென்று நரம்பு மண்டலத்தைத் தாக்கிவிடும். இதுபோன்ற சம்பவங்களும் கரூரில் நடைபெற்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன.

  கறியை வெட்டும்போது அதில் சேரும் தூய்மையற்ற நீர், மொய்க்கும் ஈ போன்றவற்றால் டைபாய்டு, காலரா போன்ற தொற்று நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சி கலப்பதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். பொதுவாக, அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால், மனிதனின் கால் முதல் தலை வரை பாதிப்பு ஏற்படும்.

   சமைத்து உண்ணப்படும் கறியிலுள்ள ஹார்மோன்கள், மனித உடலில் கலக்கும்போது மனிதனின் இயக்க ஆற்றலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கொழுப்புச் சத்தானது உடலிலுள்ள கொழுப்பை அதிகரித்து இருதய நோய், ரத்தக் கொதிப்பு, வயிறு உப்பிசம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகப் பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும், நாம் உணவாகச் சாப்பிடும் இறைச்சியில் நோய்த் தொற்று இருந்தால், அதுவும் நம்மைப் பாதிக்கும்.

  எனவே, அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவம் வேண்டுவோர் மீனைச் சாப்பிடலாம். அதிலிலுள்ள ஓமேகா 3 என்ற பொருள் இருதயத்திற்கு மிகவும் நல்லது என்றார் அவர்.

  இதுகுறித்து கரூர் நகராட்சி ஆணையர் ஜி.ஆர். உமாபதி கூறியது:

  கரூர் நகராட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் தனியார் தொடுத்திருந்த வழக்கில், கடந்த மாதம் தீர்ப்பு வெளியாகியுள்ளது. எனவே, விரைவில் ஆட்டிறைச்சிக் கூடத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.