கவனிக்கப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலை
கரூர், ஆக. 31: ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பு இன்மையாலும் கரூரில் சேதமடைந்து வரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளைப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில


கரூர், ஆக. 31: ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பு இன்மையாலும் கரூரில் சேதமடைந்து வரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளைப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்ற பல வீரர்களைப் பெற்றுள்ள நகரம் கரூராகும். மேலும், சுதந்திரப் போராட்டக் களமாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பாதுகாத்து, ஆதரவளித்த ஊராகவும் கரூர் விளங்கி வந்தது.
1947-க்குப் பின்னர், சுதந்திரத்திற்காகவும், சமுதாய விடுதலைக்காகவும் பாடுபட்ட தலைவர்களை, அடுத்த தலைமுறையினர் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் சிலைகள் வைக்கப்பட்டன.
இதனால், கரூரில் காந்தி, காமராஜர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், திருப்பூர் குமரன் ஆகியோரது சிலைகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இதில் கட்சிகளுடன் தொடர்புடைய தலைவர்களின் சிலைகள் அந்தந்த கட்சிகளின் விழாக்கள், தலைவர்களின் பிறந்த நாளின்போது சுத்தம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றன. எனினும், அந்தச் சிலைகளும் அதற்குப் பின்னர் கண்டுகொள்ளப்படுவதில்லை.
அதேநேரத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளை யாரும் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது.
ஆங்கிலேயருக்கு எதிராக திருப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸôரின் தடியடியையும் பொருட்படுத்தாமல், பிடித்திருந்த கொடியை கீழே விடாமல், உயிர் துறந்த திருப்பூர் குமரனுக்கு கரூர் நகரக் காவல் நிலையம் அருகே சிலை உள்ளது.
1948-ல் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 26.1.1950-ல் திறக்கப்பட்ட இந்தச் சிலையில், அவரது கையில் பிடித்திருக்கும் கொடிக்கம்பானது உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. தூண்களும் விரிசலுடன் உள்ளன.
இதேபோல, இந்திய தேசிய ராணுவத்தை அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸýக்கு ஜவஹர் பஜாரில் கே.வி.பி. சார்பில் இந்திய சுதந்திரப் பொன் விழா ஆண்டை முன்னிட்டு 15.8.1998-ல் நினைவுத் தூணும், சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை சுற்றிலும் சிறு, சிறு கடைகள் முளைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் அந்தச் சிலை இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
இவ்வாறு கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் சிலைகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...