வரி செலுத்துவதில் ஆர்வம் காட்டும் வேட்பாளர்கள்
கரூர், செப். 23: தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் உள்ளாட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊ


கரூர், செப். 23: தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் உள்ளாட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளுக்கான பொதுத் தேர்தல் அக். 17, 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி செப். 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட அரசியல் கட்சியினர், தனி நபர்கள் அதிகளவில் விரும்புவதால் உள்ளாட்சித் தேர்தல் எப்போதும் கடும் சவால் நிறைந்ததாகவும், விறுவிறுப்பானதாகவும் இருக்கும்.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 12 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 115 பேரும், ஊராட்சித் தலைவர்கள் 157 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1,401 பேரும், நகராட்சித் தலைவர்கள் 2 பேரும், வார்டு கவுன்சிலர்கள் 72 பேரும், பேரூராட்சித் தலைவர்கள் 11 பேரும், வார்டு உறுப்பினர்கள் 171 பேரும் மொத்தம் 1,941 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், கட்சி சார்பாக போட்டியிடும் பதவிகள் சுமார் 500 பதவிகள் உள்ளன. தற்போது, அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி அமைக்காமல் தனித் தனியாக களம் காணவுள்ளதால், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால், ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் பகுதியில் தங்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்படும் என்ற நினைப்பில் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர்.
இதற்கு முன்னேற்பாடாக வேட்பாளராக விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தாதபட்சத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
எனவே, கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் வேட்பாளர்கள் செலுத்தி உரிய ரசீதுகளை பெற்று வருகின்றனர். மேலும், சிலர் கடந்த பல ஆண்டுகளாக செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் வரிகளையும் தாங்களாகவே முன்வந்து செலுத்தி ரசீது பெற்று செல்கின்றனர்.
மேலும், சில வேட்பாளர்கள், வேட்பு மனு பரிசீலனையின் போது பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக வரிகள் பாக்கியில்லை என்ற சான்றிதழையும் உள்ளாட்சி அமைப்புகளிடம் பெற்று வருகின்றனர். இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தப்படாமல் இருந்த வரி நிலுவை தற்போது வசூலாகி வருவதாக அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, வாக்காளர் பட்டியலும் ஒவ்வொரு நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பாகம் எண்., வார்டு எண்., உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், தொகுதியிலுள்ள மற்ற வாக்காளர்களின் விவரங்களை தெரிந்து கொள்ளவும் வேட்பாளர்கள் வாக்காளர் பட்டியலை தங்களது கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
இதனால், இந்தப் பட்டியலையும் வேட்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் பணம் செலுத்தி பெற்று வருகின்றனர். ஒரு பக்கத்துக்கு ரூ. 5 பெற்றுக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...