ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்குள் புதிய சாலை: பொதுமக்கள் அதிருப்தி

அரியலூர், பிப். 22: அரியலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியே முழுமையாக முடியாத நிலையில், புதிதாக தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற
Updated on
2 min read

அரியலூர், பிப். 22: அரியலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியே முழுமையாக முடியாத நிலையில், புதிதாக தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அரியலூர் நகரில் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செந்துறை சாலையிலிருந்து பிரதான மார்கெட் தெருவிற்கு வரும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி என முழுமையாகக் கண்டறியப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. ஆனால், அடுத்த நாளே அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன.

  கடந்த ஒரு மாதமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. நகராட்சியின் சில முக்கிய சாலைகளில் உள்ள வீடுகள், பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காணும் வகையில் அடையாளக் குறியீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், பின்னர் அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடருவதுமாக உள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நிகழக் கூடாது என்பதற்காக, பேருந்து நிலையத்திலிருந்து நீதிமன்றச் சாலை வரையிலான பகுதிக்குள் மட்டும்  கழிவுநீர்ச் சாக்கடை கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன.

 இந்த நிலையில், அதைத் தொடர்ந்துள்ள புதிய மார்க்கெட் தெரு, மங்காய்பிள்ளையார் கோவில் தெரு, வெள்ளாளத் தெரு, தஞ்சாவூர் சாலை, பெரம்பலூர் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் உருவான மண் குவியல்கள் அள்ளப்படாமல், சாக்கடைகள் திறந்த நிலையிலேயே இருக்கின்றன.

  மற்ற பகுதிகளில் சாக்கடைகள் அமைப்பதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படாத நிலையில், அந்தந்தப் பகுதிகளில் சாக்கடைக்கு மேல் இருந்த கல்கள் மட்டும் எடுக்கப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை இருந்து வரும் நிலையில், பலரும் சாக்கடையில் விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

  தங்களது கடைகளுக்கு வெளியே இவ்வாறு இருப்பது தங்களின் வியாபாரத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், சீரான அளவில் கழிவுநீர்ச் சாக்கடை அமைக்க வேண்டும் என்றும், அந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி அரியலூர் நகர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 அதற்கு, பேருந்து நிலையத்தில் அருகிலுள்ள சாலையில் தொடங்கி, கழிவுநீர்ச் சாக்கடையின் மேல் பகுதியில் சமமான அளவில் நடைபாதைத் தளம் அமைத்துத் தரப்படும் என அவர் உறுதியளித்திருந்தார்.

  இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை அரியலூர் நகரில் புதிய மார்க்கெட் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கட்டடங்கள் இடிக்கப்பட்டதால் உருவான மண் குவியல்கள் அகற்றும் பணி பொக்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் அன்று இரவோடு இரவாக நெடுஞ்சாலைத் துறையினர் மூலமாக, புதிய மார்க்கெட் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலிருந்து தொடங்கி சத்திரம் வரையிலான பகுதியில் சாலையின் ஒரு பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

 அவசரம் எதற்கு? ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, சாலையோரத்தில் சாக்கடைகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, நடைபாதை அமைப்புப் பணிகளை முழுமையாக முடித்த பின்னர் புதிதாக சாலைகள் அமைக்கலாம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. இன்னும் இந்தப் பணிகள் எல்லாம் முழுமையாக முடியாத நிலையில், அவசரகதியில் சாலை அமைப்பதன் அவசியம் என்னவென்று தெரியவில்லை என்கின்றனர் அரியலூரைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும்.

  அரியலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் எல்லாம் இன்னமும் சரி செய்யப்படாமல் உள்ள நிலையில், தற்போது சாலை புதிதாகப் போடப்பட்டிருக்கும் பகுதியிலும் விரைவில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்படலாம். அப்போது, புதிதாகப் போடப்பட்ட சாலை மீண்டும் தோண்டப்படும்.   

 நிலைமை இவ்வாறு இருக்க அதற்குள் எதற்காக சாலை போடப்பட்டது என்பது தெரியவில்லை.

எனவே, அரியலூர் நகரில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நடைபாதைகள் முழுமையாக அமைக்கப்பட்டு, அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட பின்னரே, புதிதாக தார்ச் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையின் மையப் பகுதியில் இருக்கும் தொலைபேசிக் கம்பங்கள், மின் கம்பங்களையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com