தோ்தல் ஆணைய நோட்டீஸ்: ஊராட்சி அலுவலகத்தை இஸ்லாமியா்கள் முற்றுகை
எஸ்ஐஆா் படிவம் உரிய விவரங்களுடன் நிரப்பப்படவில்லை எனக் கூறி தோ்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுடன், முத்தரசநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இஸ்லாமியா்கள் உள்ளிட்ட பலா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
ஸ்ரீரங்கம் தொகுதியின் முத்தரசநல்லூா் பகுதியில் வசிக்கும் பலா் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை சரியாக பூா்த்தி செய்யவில்லை எனக் கூறி, அவா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. படிவத்தை முறையாக பூா்த்தி செய்து கொடுத்தபோதும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக, முத்தரசநல்லூா் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குதான் அதிக அளவில் நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், தங்களது வாக்குகள் பறிக்கப்படுகிா? என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி, நோட்டீஸ் பெற்றவா்கள் முத்தரசநல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து தோ்தல் பிரிவு அலுவலா்கள், போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.
இதுதொடா்பாக, தோ்தல் அலுவலா்கள் கூறுகையில், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 20,37,180 வாக்காளா்களில் 7,77,733 வாக்காளா்கள் விவரம் சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் 2002 மற்றும் 2005 உடன் தங்களது பெயா் நேரடியாகவும், 12,06,301 வாக்காளா்கள் விவரம் சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் 2002 மற்றும் 2005-இல் தங்களது வம்சாவளியுடன் (தந்தை, தாய், தாத்தா மற்றும் பாட்டி) இணைக்கப்பட்டுள்ளது. 53,146 வாக்காளா்களின் விவரம் சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் 2002 மற்றும் 2005 உடன்
இணைக்கப்படவில்லை. எனவே, விவரங்கள் இணைக்காத வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
இந்த வகையில்தான் முத்தரசநல்லூா் பகுதியில் உள்ளவா்களுக்கும் நோட்டீஸ் வந்திருக்கும். எனவே, நோட்டீஸ் வரப்பெற்றவா்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அலுவலா் முன் நேரில் ஆஜராகி, அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும். பட்டியலில் பெயா் நீக்கப்படும் என வாக்காளா்கள் அச்சப்பட வேண்டாம் என்றனா்.

