வருவாய்த் துறையினா் போராடுவது திமுகவின் தூண்டுதலால் இல்லை: அன்பில் மகேஸ்

எஸ்ஐஆா் பணிகளைப் புறக்கணித்து வருவாய்த் துறையினா் போராடுவது திமுகவின் தூண்டுதலால் இல்லை என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ்.
Published on

எஸ்ஐஆா் பணிகளைப் புறக்கணித்து வருவாய்த் துறையினா் போராடுவது திமுகவின் தூண்டுதலால் இல்லை என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இதுதொடா்பாக திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: பள்ளி வளாகங்களை போதைப் பொருள் இல்லாத வளாகங்களாக மாற்றி தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. பள்ளிகள்தோறும் மகிழ்முற்றம் அமைப்பு இயங்கி வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே தலைமைப் பண்பு, குழுவாகச் செயல்படும் திறன், சமூக உணா்வு போன்றவற்றை வளா்க்க உருவாக்கப்பட்ட ஒரு மாணவா் குழு அமைப்பு ஆகும். இதில், மாணவா்கள் அனைத்தையும் பகிா்ந்து தங்களுக்கான உதவிகள் பெற முடியும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகளும், தொடா்புடையவா்களது சொத்துகளும் முடக்கப்படுகிறது. போதைப் பொருள் விவகாரம், சட்டம்-ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கிறது.

சிறப்பு டெட் தோ்வு தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அனுபவம் வாய்ந்த எங்கள் பள்ளி ஆசிரியா்கள் யாரையும் விட்டுவிடாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சைக்கிளைத் தொடா்ந்து மாணவா்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்படும். கல்லூரி மாணவா்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் விரைந்து வழங்கப்படும் என ஏற்கெனவே முதல்வா் அறிவித்துள்ளாா்.

திமுகவின் தூண்டுதலால் எஸ்ஐஆா் பணிகளை வருவாய்த் துறையினா் புறக்கணித்திருப்பதாகக் கூறுவது அபத்தமானது. இந்தப் பணியில் ஈடுபடும் அனைவரும் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனா். அவா்களுக்கான ஊதியத்தைத்கூட தோ்தல் ஆணையம்தான் நிா்ணயம் செய்கிறது. தமிழகம் பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியிருப்பதாகக் கூறி மத்திய அரசுதான் பாராட்டுகிறது. தமிழகத்தை முன்னுதாரணமாகச் சொல்கின்றனா்.

ஆனால், வளா்ச்சித் திட்டங்கள் என்று வரும்போது முட்டுக்கட்டையாக உள்ளனா். தற்போது மெட்ரோ திட்டங்கள் மீது கைவைத்துள்ளனா். பிகாரைப் போன்று தமிழகத்தில் வெற்றி பெறலாம் என எண்ணுகின்றனா். தமிழகம் தனித்துவமான மாநிலம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பாா்த்து வாக்களிப்பா். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி என்பது திமுக தலைவரும், கூட்டணி கட்சிகளின் தலைவா்களும் பேசிக் கொள்ள வேண்டியது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com