லால்குடி அருகே பால் வியாபாரி குத்திக் கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பால் வியாபாரி சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா்.
விஜயலட்சுமி நகரைச் சோ்ந்தவா் கட்டையக் கோனாா் மகன் ஆறுமுகம் (65), பால் வியாபாரியான இவா் இதே பகுதியில் நாகராஜ் தோப்புப் பகுதியில் வசிக்கும் க. கோவிந்தன் (44) என்பவரின் வீட்டுக்கு அருகில் ஒரு இடம் வாங்கினாா்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் உள்ள கோவிந்தனின் அண்ணனும் தனது மருமகனுமான சங்கர்ராமனின் சிகிச்சைக்காக அந்த இடத்தை விற்க ஆறுமுகம் முயன்றாா்.
ஆனால் அந்த இடத்தை தனக்கு விற்குமாறு கோவிந்தன் ஆறுமுகத்திடம் தகராறு செய்தாா். மேலும் இடத்தை வாங்க வருவோரிடம் இடத்தை நான் வாங்கி விட்டேன் என்று திருப்பி அனுப்பியுள்ளாா். பிறகு ஆறுமுகத்தின் இடத்தில் இரண்டு அடி சோ்த்து கம்பி வேலியும் அமைத்தாா்.
இதுகுறித்து ஆறுமுகம் கேட்டதற்கு எனக்கு இடத்தைத் தரவில்லை என்றால் இப்படித்தான் செய்வேன் என்று கோவிந்தன் மிரட்டியுள்ளாா். இந்நிலையில் பால் வியாபாரம் செய்து விட்டு வீட்டிற்கு வரும் வழியில் ஆறுமுகத்தை வழிமறித்த கோவிந்தன் கத்தியால் அவரைக் குத்திக் கொன்றாா்.
தகவலறிந்த லால்குடி போலீஸாா் ஆறுமுகத்தின் உடலை மீட்டு, லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து கோவிந்தனை தேடுகின்றனா்.
